பாடசாலை மாணவியை தவறான நடத்தைக்குட்படுத்திய இருவர் கைது
புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒருவரை தவறான நடத்தைக்குட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவி ஒருவர், கடந்த 24ஆம் திகதி மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து வைத்திய பரிசோதனையின் போது சிறுமி தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. அதனையடுத்து குறித்த சிறுமியை இளைஞன் ஒருவர் பாடசாலை வகுப்பிற்கு அழைத்து செல்வதாக கூறி பற்றைக்காட்டுக்குள் அழைத்து செல்வதாக ஆரம்பகட்ட தகவல் கிடைத்திருந்தது.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள்
அதன் பின்னர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் முறைப்பாட்டு பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பதியப்பட்டதனையடுத்து சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2ஆம் வட்டாரம், கோம்பாவில் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரும் தவறான நடத்தைக்கு உடந்தையாக இருந்ததென கூறி 19 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களை நேற்றுமுன்தினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்திய போது எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதிவரை இரு இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை இடம்பெற்று வருகின்றது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |