அரசியல் படுத்தப்படுத்தப்படாத ரசிகர்களின் அவல நிலை!
ஊடகத் துறையில் அரசு மற்றும் கட்சிகளின் ஆதிக்கம் ஒரு போதும் ஊடுருவக் கூடாது. அதேபோல அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்களால் ஏற்படும் பாதிப்புக்களும் ஊடுருவ அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அமையாது.
ஊடக அறத்துடன் நேர்மையாகத் இயங்கும் ஊடகங்கள் மீதாக அடக்குமுறை மற்றும் தாக்கங்கள் அதனை சுதந்திரமாக செயற்படுத்தாது.
இந்த பின்னணியில் இந்திய அரசியல்வாதியும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் அரசியல் ஆதரவாளர்கள் சிலர் ஊடகவியலாளர் ஒருவருக்கு பதில் வழங்கிய செயற்பாடுகள் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளன.
இதன்படி இறுதியாக தமிழ்நாட்டின் திருச்சியில் இடம்பெற்ற குறித்த கட்சியின் தலைவர் விஜய்யின் பேரணியில் கலந்துகொண்ட ஆதரவாளர்கள் ஊடகவியலாளர்களை நடத்திய விடயம் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேரணியில் ஆதரவாளர்கள் நேரடி காட்சிகளை ஒளிபரப்பிய சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளுக்கு இடையூராக செயற்பட்ட காணொளிகள் தற்போது வெளியாகி வருகின்றன.
செய்தி அறிக்கை
செய்தி அறிக்கையிடலின் போது, பத்திரிகையாளர் ஒருவரை ஆதரவாளர்கள் சிலர் விமர்சிப்பது போன்ற காணொளிகள் வெளியாகியுள்ளன.
கடந்த சனிக்கிழமை, த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரப் பேரணியை திருச்சியில் தொடங்கினார்.
முதல் பேரணியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்வு தொடர்பில் செய்தி சேகரிக்க திருச்சிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது ஆதரவாளர்கள்(விஜய் ரசிகர்கள்) குழுவாக தாக்குதலும் நடத்தியிருந்ததாக சில இந்திய ஊடகங்கள் மேற்கோள்காட்டுகின்றன.
அவர்கள் அவரைச் சுற்றி நடனமாடி, சைகைகளால் அவரை கேலி செய்து, அவரது செய்தித் தொகுப்பை சீர்குலைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.
இதில் ஆதரவாளர் ஒருவர் பத்திரிகையாளரின் தலையில் கட்சி சின்ன சால்வையை சுற்றியிருந்தார்.
இது தொடர்பில் தமிழ்நாட்டின் சமூக ஆர்வலர் சுனந்தா தாமரைச்செல்வன் “அரசியல்மயமாக்கப்படாத ரசிகர்களின் பரிதாபகரமான நிலை” என இதனை விமர்சித்திருந்தார்.
தமிழ்நாட்டினை பொறுத்தவரை தற்போதைய இளைய சமுதாயத்தின் அடிப்படை யதார்த்தத்தை விளக்கும் இந்த காணொளி மிக சர்ச்சைக்குறியதாக கருதப்படுகிறது.
திரைப்படங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தி இளைஞர்களின் மனதை மயக்கும் அரசியல் நகர்வுகள் எதிர்கால அரசியலை எவ்வாறு நகர்த்தபோகிறது என்ற கேள்வி இந்த இடத்தில் உருவாகிறது.
சித்தாந்த பிரசாரம்
தமிழ்நாட்டை பொறுத்தவரை சில அரசியல்வாதிகள் திரைப்படங்களை அவர்களின் தனிப்பட்ட சித்தாந்த பிரசாரத்திற்கும், தங்கள் தயாரிப்பு நிறுவனங்களைப் பயன்படுத்தி தங்கள் செல்வத்தைப் பெருக்குவதற்கும் பயன்படுத்தியதாகவும் தொடர்ந்தும் விமர்சிக்கப்படுகிறது.
இன்று த.வெ.கவின் பெரும்பாலான ஆதரவாளர்கள் இந்த சாகசத்தின் விளைவில் சிக்கியுள்ளனரா என என்ன தோன்றுகிறது.
ஊடகம் என்பது ஜனநாயகத்தின் வெற்றிக்கு பங்களிக்கும் ஒரு முக்கிய அங்கமாகும். அதற்கு உழைக்கும் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் மகத்தானவை. ஜனநாயக நாட்டில் ஊடக சுதந்திரமானது முக்கியமானதொரு அங்கமாகும்.
ஒரு நாட்டின் ஊடகங்கள் ஜனநாயகத்தை பாதுகாக்கும் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாக பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
“ஒரு நாட்டின் மக்களை, அவர்கள் சார்ந்த இனம், மதம், மொழி, சாதி, பாலினம் என்று பிரித்துப் பாகுபடுத்தாமல், சம உரிமைகளை அவர்களுக்கு உத்திரவாதப்படுத்திச் சாத்தியப்படுத்துவது.
“ஆட்சி அதிகாரம், சட்டம், நீதி, அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி வெகுஜன மக்களின் அடிப்படைச் சுதந்திர உரிமைகளைப் பறிக்கும் மாநில / ஒன்றிய ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து, மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவது”.
இதுவே மேற்படி விஜய்யை தலைமையாக கொண்ட கட்சியின் ஜனநாயக கொள்கை.
அவ்வாறென்றால் இந்த கொள்கை அவர்களின் ரசிகர்களுக்கு விளங்கவில்லையா? அல்லது விளக்கப்படவில்லையா?
மேலும், இந்த பேரணியில் திருச்சி நகரில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காகவும் விஜய்யின் ஆதரவாளர்களும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பேரணி கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் தாமதமானதால் குறித்த நகரம் பெரும் போக்குவரத்து இடையூறுகளை சந்தித்தது.
காலை 10.30 மணி முதல் 11 மணி வரை த.வெ.கவின் அரசியல் பிரசாரத்துக்கு தமிழ்நாட்டு பொலிஸார் அனுமதித்திருந்தாலும், விஜய்யின் பிரசார வாகனம் நத்தை வேகத்தில் நகர்ந்தது, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களால் சூழப்பட்டது என சில அரசியல் தரப்புக்கள் விமர்சிக்கின்றன.
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேரணிக்கு பதிலளித்து, "ஒரு நடிகர் திரையிலிருந்து வெளியே வரும்போது கூட்டம் கூடும். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் அனைவரும் கூட்டத்தை ஈர்த்தனர்.
இந்திய பொருளாதாரம்
அஜித் அல்லது ரஜினிகாந்த் அல்லது நயன்தாரா வந்தாலும் அதிக கூட்டத்தை ஈர்ப்பார்கள். ஒருவர் முன்வைக்கும் அரசியலைப் பாருங்கள், கூட்டத்தை அல்ல" என கூறியிருந்தார்.
இந்நிலையில் இவ்வாறு விமர்சனங்களை பெற்றுவரும் குறித்த கட்சியின் செயற்பாடுகள் தற்போது ஊடகத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஊடகத்தின் மகத்துவத்தை ஒவ்வொரு நாட்டினதும் ஜனநாயக தனிநபரும் விளங்கிக்கொள்ளவேண்டும்.
உதாரணமாக 1990ஆண்டு இந்தியா பொருளாதார சவால்களை ஏராளமாக சந்தித்த காலம். அந்த நேரத்தில், இந்தியா தனது பொருளாதார நம்பகத்தன்மையைத் தக்கவைக்க அந்நாட்டின் தங்கம் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டது.
மேலும், அந்நிய செலாவணி கையிருப்பு அப்போது சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டுள்ளது.
எனினும் தற்போது 2025ல் இதுவரை மொத்த அந்நிய செலாவணி சுமார் 49 பில்லியன்வரை உயர்ந்துள்ளது.
இது ஒரு நாட்டின் வளர்ச்சியைக் காட்டும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை.
இதற்கு இந்தியாவின் பொருளாதார நிலைகளை ஊடகங்கள் வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியமையை முக்கிய காரணமாக கருதவேண்டும்.
ஒவ்வொரு தனிநபரும் சட்டத்தின் முன் சமமாகவும், அதற்கு பொறுப்பேற்கக் கடமைப்பட்டவர்களாகவும் இருக்கக்கூடிய நாட்டை வடிவமைப்பதில் ஊடகங்கள் முக்கிய பங்குதாரராக விளங்கியுள்ளமை இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் கவனம் செலுத்தவும், நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் சீரான உரையாடல்களை வளர்க்கவும் ஊடகங்கள் பங்களிப்பை வெளிப்படுத்துவதை காணக்கூடியதாய் உள்ளன.
இந்த பின்னணி கொண்ட இந்தியாவில் ஒரு ஊடகவியலாளரின் கருத்தும் சுதந்திரமும் அரசியலால் அபகரிக்கப்படுவது வேடிக்கைக்குரியதல்லவா...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



