இலங்கைக்கு போதைப்பொருளை கடத்த முயற்சித்த தவெக நிர்வாகி உள்ளிட்ட நால்வர் கைது
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப்பொருட்களை கடத்துவதற்கு திட்டமிட்ட, தமிழகத்தை சேர்ந்த 'தமிழக வெற்றிக்கழகம்' கட்சியின் செயற்பாட்டாளர் உட்பட நான்கு நபர்கள் இந்திய புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 100 கிலோ கிராம் மெத்தபெட்டமைன் என்னும் போதைப்பொருள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தவெக நிர்வாகி உள்ளிட்ட நால்வர் கைது
த.வெ.க நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் உட்பட மேலும் மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகநபர்களின் வீடுகளை சோதனையிட்டுள்ளனர்.
குறித்த நபரின் மனைவி இலங்கையை சேர்ந்தவர் என்பதால், இந்த கடத்தலுக்கு அவை உதவியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பதவி நீக்கம்
இதனையடுத்து சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த போதைப்பொருள் தொகை தமிழகத்தின் பல பகுதிகளுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களும் போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக நாகப்பட்டினம் சுங்க அலுவலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை மற்றும் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாகச் செயற்பட்டமை காரணமாக குறித்த நபரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்குவதாக த.வெ.க நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.