ஷிரந்தி இதுவரை குற்றவாளி அல்ல! நீதவானின் அறிவிப்பை அடுத்து மகிந்த தரப்பு அளித்துள்ள உறுதி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச, இந்த நாட்டின் மக்களுக்குச் சொந்தமான எந்தவொரு பணத்தையும் களவாடவில்லை என்பதை நிரூபித்துக் காட்டுவோம் என்று மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஷிரந்தி ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நீதவானின் இந்த உத்தரவின் பின்னர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே சட்டத்தரணி மனோஜ் கமகே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவோம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவை பிணையில் செல்ல அனுமதித்து நீதவான் உத்தரவுப் பிறப்பித்துள்ளார். இதன்போது, நீதவான் தெளிவாக ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது, ஷிரந்தி ராஜபக்ச ஒரு சந்தேகநபர் மாத்திரமே. அவரை இதுவரை குற்றவாளியாகக் கருத முடியாது என்பதை நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.
அவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நலப் பிரச்சினையை இரண்டு விசேட மருத்துவக் குழுக்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அவரது இரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக, அவருக்கு இருதய பைபாஸ் சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக மருத்துவக் குழுக்கள் தெளிவாக தெரிவித்துள்ளன.
எனவே, அவரது உடல்நிலையை ஒரு விசேட சூழ்நிலையாகக் கருத்திற்கொள்ள வேண்டும் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பொதுவாக ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவுடனேயே, அவர் குற்றவாளி என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் நிலை காணப்படுகின்றது.
ஆனால், இலங்கையின் சட்டத்தில் நிரபராதி என்ற அனுமானக் கோட்பாடு உள்ளது. அதாவது, ஒருவருககு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்டப்ட மாத்திரத்தில் அவர் குற்றவாளியாகிவிட மாட்டார். அவர் ஒரு சந்தேகநபர் மட்டுமே. நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியாகவே கருதப்பட வேண்டும்.
எனவே, எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையின் போது, ஷிரந்தி ராஜபக்ச இந்த நாட்டின் மக்களுக்குச் சொந்தமான எந்தவொரு பணத்தையும் திருடவில்லை என்பதை நாம் ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவோம் என குறிப்பிட்டுள்ளார்.