சிறப்பு விமானத்தில் டெல்லி செல்லும் விஜய்.. அதிகாரிகளிடம் தவெக முன்வைத்துள்ள கோரிக்கை
மத்திய புலனாய்வு பிரிவில், முன்னிலையாவதற்கு முன்னதாக தவெக தலைவர் விஜய்க்கு டெல்லி பொலிஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாளை கரூர் வழக்கு தொடர்பாக புதுடில்லியில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவில் (சிபிஐ) முன்னிலையாகவுள்ளார்.
இந்நிலையில், அக்கட்சி இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் டெல்லி பொலிஸாருக்கு பாதுகாப்பு கோரி மின்னஞ்சல் அனுப்பியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருநாள் விசாரணை
குறித்த வழக்கில் பொது நலன் மற்றும் தலைவரின் சுய பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர் பயணம் செய்யும் போதும் சிபிஐ முன் முன்னிலையாகும் போதும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாங்கள் கோரியுள்ளோம் என்று கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 6ஆம் திகதி சிபிஐயின் டெல்லி அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பப்பட்டது.
திங்கள்கிழமை காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் காலை 7 மணிக்கு டெல்லியை அடைந்து, காலை 11 மணிக்கு புலனாய்வாளர்கள் முன் முன்னிலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை இரண்டு நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
உரிய பாதுகாப்பு
ஜனவரி 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் விசாரணை நடைபெறும் என்று விஜய்க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்ததும் ஜனவரி 13 ஆம் திகதி மாலை அவர் சென்னை திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தவெக கட்சியின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கரூர் விடயத்தில் விசாரணையின் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள பல மூத்த தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ முன்னதாக கிட்டத்தட்ட 19.5 மணி நேரம் விசாரணை நடத்தியது.
விஜயின் வருகை இப்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் அவர் தங்கியிருக்கும் போதும், நடமாட்டத்தின் போதும் பாதுகாப்பு மற்றும் தளவாட ஒருங்கிணைப்பை உறுதி செய்யுமாறு கட்சியினரும் சிபிஐயும் டெல்லி பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.