உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்திய துருக்கி நிலநடுக்கம்! 248 மணி நேர போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்ட பெண்
துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,000ஐ நெருங்கியுள்ளது.
இந்த அனர்த்தத்தில் துருக்கியில் 36,187 பேர் உயிரிழந்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் 5,800க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சிரிய அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு
இந்த பேரழிவு காரணமான நோயாளிகளின் வருகையை சமாளிக்க முடியாமல் மருத்துவமனைகள் போராடி வரும் நிலையில் அவர்களுக்கு மருத்துவப் பொருட்கள் மற்றும் உதவிகளை வழங்க உதவுமாறு மருத்துவர்கள் சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் துருக்கி மற்றும் சிரியாவில் 8 ஆவது நாளாக மீட்புப் பணி நீடித்து வரும் நிலையில், உயிருடன் மீட்கப்பட்டவர்கள் கடுங்குளிர் மற்றும் பசியின் காரணமாக கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, துருக்கியின் கஹ்ராமன்மாராஸில் 248 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.




