ஜனாதிபதியை முகநூலில் விமர்சித்தவருக்கு வெளிநாடொன்றில் மரண தண்டனை
துனிசியாவில் சமூக ஊடகங்களின் வாயிலாக அந்நாட்டு ஜனாதிபதியான காயிஸ் சயீத்தை அவமதிக்கும் வகையில் விமர்சனங்களை வெளியிட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டிக்கப்பட்டவர் சாபர் சூஷேன் (Saber Chouchane) எனப்படும் 56 வயதுடைய ஓர் தொழிலாளி எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது நாட்டில் இதுவரை இல்லாத மிகக் கடுமையான தீர்ப்பாக மனித உரிமை அமைப்புகள் விமர்சித்துள்ளன.
தண்டனை
துனிசியா மனித உரிமை சங்கத் தலைவர் மற்றும் குற்றவாளியின் வழக்கறிஞர் இருவரும் இந்த தண்டனை குறித்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றம், ஃபேஸ்புக் பதிவுகளுக்காக ஒரு நபருக்கு மரணதண்டனை விதித்துள்ளது. இது அதிர்ச்சிகரமானதும் முன்னெப்போதும் இல்லாத தீர்ப்புமாகும் என தண்டனை விதிக்கப்பட்டவரின் சட்டத்தரணி உசாமா பௌத்தல்ஜா தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
எனினும், துனிசியா நீதித்துறை அமைச்சகம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. துனிசியாவில் கடந்த முப்பது ஆண்டுகளாக மரணதண்டனைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
கடுமையான நடவடிக்கைகள்
பல செயற்பாட்டாளர்கள் மற்றும் சாதாரண துனிசியர்கள், இந்த தீர்ப்பை ஜனாதிபதி சயீதை விமர்சிக்கும் மக்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன் எடுத்த நடவடிக்கையாகக் குற்றம்சாட்டினர்.

இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் நாட்டின் கருத்துரிமையை மேலும் ஒடுக்கி, அரசியல் பதற்றத்தை தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டு ஜனாதிபதி காயிஸ் சயீத் நாடாளுமன்றத்தை கலைத்து, அனைத்து அதிகாரங்களையும் தன்னிடமேக் குவித்ததன் பின்னர், துனிசியாவில் நீதித்துறை சுதந்திரம் குறைந்து வருகிறது என மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.