செவ்வாய் இரவு 8 மணி! முதல் முறையாக தாக்குதல் நேரத்தை அறிவித்த ட்ரம்ப் - வளைகுடாவில் ஏற்பட்ட பதற்றம்
6NN34GKவழக்கத்திற்கு மாறான முறையில், ஒரு இராணுவத் தாக்குதலின் நேரத்தை தனது 'ட்ரூத் சோசியல்' (Truth Social) தளத்தில் ட்ரம்ப் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
"செவ்வாய்க்கிழமை, இரவு 8:00 மணி!" என்று அவர் பதிவிட்டுள்ள இந்த நேரம், இலங்கை நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5:30 ஆக அமையும்.
ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக உடனடியாகத் திறக்கத் தவறினால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் போன்ற பொதுமக்களின் அத்தியாவசிய உட்கட்டமைப்புகள் மீது "தண்டனைக்குரிய தாக்குதல்" நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
இது ஒரு சாதாரண இராணுவ நடவடிக்கை அல்ல, மாறாக ஈரானுக்கு ஒரு பாடமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தீவிரமான அச்சுறுத்தலுக்குப் பின்னால் ஒரு முக்கிய இராணுவச் சம்பவம் உள்ளது.
ஈரானுக்கு முற்றுப்புள்ளி
ஈரானுக்குள் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் F-15E ஸ்ட்ரைக் ஈகிள் (Strike Eagle) போர் விமானத்தின் ஆயுதக் கட்டமைப்பு அதிகாரி (Weapons Systems Officer) ஒருவரை அமெரிக்கப் படைகள் அதிரடியாக மீட்டெடுத்தன.
இந்த மீட்புப் பணியைத் தொடர்ந்து, ஈரானின் பிடிவாதமான போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கவே ட்ரம்ப் இத்தகைய கடுமையான முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச பரப்பு தெரிவிக்கின்றது.
இந்நிலையில், உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி தற்போது ஆறாவது வாரமாகத் தொடரும் இந்தப் போர், பிராந்தியம் முழுவதும் விரிவடைந்துள்ளது.

இஸ்ரேலிய நகரங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் வளைகுடா நாடுகளின் எரிசக்தி மையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அதேநேரம், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலும் ஈரானியத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக, புஷெர் (Bushehr) அணுமின் நிலையம் மீது தாக்குதல் தொடர்ந்தால், அது வளைகுடா நாடுகளின் தலைநகரங்களில் கதிரியக்கப் பாதிப்பை ஏற்படுத்தும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தூண்டுதலின் பேரிலேயே ட்ரம்ப் செயல்படுவதாகவும், இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் அவர் சாடியுள்ளார்.
மறுபுறம், ஈரானின் நட்பு நாடான ரஷ்யா, அமெரிக்காவை இத்தகைய எச்சரிக்கைகளைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு வலியுறுத்தியுள்ளது. ஆனால், தெஹ்ரானில் உள்ள பொதுமக்கள் மத்தியில் இந்த அச்சுறுத்தல்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும், அங்கு இயல்பு வாழ்க்கை தொடர்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.