சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நாடளாவிய ரீதியில் அஞ்சலி (video)
சுனாமி பேபி என்று அழைக்கப்படுகின்ற அபிலாஷ் தனது இல்லத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு இன்று (26.12.2022) அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுனாமி தாக்கத்தினால் இலங்கையின் கிழக்கு மாகாணமே மிகவும் பாதிப்புக்குள்ளாகியது.
இந்நிலையில் கடந்த 2004.12.26 அன்று சுனாமியால் காணாமல்போய் பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட அபிலாஷ் என்ற ஆண் குழந்தையை 9 தாய்மார்கள் உரிமை கொண்டாடியிருந்தனர்.
எனவே மரபணு பரிசோதனை மூலம் குறித்த குழந்தை ஜெயராசா தம்பதியினரது குழந்தை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த ஆண் குழந்தை சுனாமி பேபி என அழைக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் தனது 18வது வயதில் சுனாமி நினைவு தினத்தில் உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்து: ருஷாத்
முல்லைத்தீவு
முல்லைத்தீவில் ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு இன்று (26.12.2022) நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தின் புதுகுடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும் மேற்பட்டவர்கள் காவுகொள்ளப்பட்டனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு, திருச்செந்தூரில் உயிரிழந்த 243 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் விசேட பூஜைகள் நடத்தப்பட்டதுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், பிரசன்னா இந்திரகுமார், பிரசாந்தன் என பலரும் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலையகம்
சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு மலையக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய ஹட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில் புத்தர் சிலைக்கு முன்னால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் நடைபெற்றுள்ளது.
ஹட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என பலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: கிஷாந்தன், மலைவாஞ்சன், ருஷாத்
யாழ்ப்பாணம்
யாழ். வடமராட்சி பகுதியில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி உடுத்துறை நினைவாலயத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது.
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதற்கமைய ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கான 18ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
சுனாமி பேரலையில் உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவ படத்திற்கு அகவணக்கம் செலுத்தி ஈகை சுடரேற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சின், பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டிலும் சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் ஈகைச்சுடரினை ஏற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்துவைத்துள்ளார்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ஆலய பங்குத்தந்தை, மருதங்கேணி பொலிஸ் அதிகாரி, இராணு
அதிகாரி, அரசியல் பிரமுகர்கள், உயிரிழந்தவர்களது உறவுகள் மற்றும் பொதுமக்கள்
என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
செய்தி: கஜிந்தன், தீபன்
வவுனியா
வவுனியாவில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த விசேட வழிபாடுகளும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் பி.ஏ. சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.கே ரத்நாயக்க, மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஆலய பரிபாலன சபையினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டிலும் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
செய்தி: திலீபன், ஷான்
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (26.12.2022) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டிலும், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வின் போது தீபம் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சர்வமத தலைவர்கள் மற்றும் திணைக்களத்தலைர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
நாடளாவிய ரீதியில் சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படும் நிலையில் கிளிநொச்சியிலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வின் போது தீபம் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம்
சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு புத்தளத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி மற்றும் ஆத்மா ஷாந்தி வேண்டி பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.எஸ்.பி ஹேரத் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்கள், புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள், விமானப்படையினர், இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
