சுனாமியினால் உயிரிழந்தவர்களுக்கு தனது இல்லத்தில் அஞ்சலி செலுத்திய சுனாமி பேபி அபிலாஷ்
ஆழிப்பேரலையின் தாக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு சுனாமி பேபி என்றழைக்கப்படும் அபிலாஷ் தனது இல்லத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் இன்றைய தினம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுனாமி தாக்கத்தினால் கிழக்கு மாகாணமே மிகவும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2004.12.26 அன்று சுனாமியால் காணாமல்போய் பின்னர் வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட அபிலாஷ் என்ற ஆண் குழந்தை ஒன்றுக்கு அப்போது 9 தாய்மார்கள் உரிமை கொண்டாடியிருந்தனர்.
அபிலாஷ் அப்போதிருந்து சுனாமி பேபி என்றே அழைக்கப்பட்டு வருகின்றார். பின்னர் மரபணு பரிசோதனை மூலம் மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த ஜெயராசா தம்பதியினரது குழந்தை என உறுதிப்படுத்தப்பட்டு பின்னர் அக்குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
தற்போது அபிலாஷிற்கு 16 வயது. அபிலாஷ் தனது இல்லத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு பெற்றோர், உறவினர்களுடன் இணைந்து சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்த அனைத்து உறவுகளுக்கும் தாம் இந்த நேரத்தில் அஞ்சலி செலுத்துவதாக அபிலாஷ் தெரிவித்துள்ளார்.




