ஈரான் மீது புதிய தாக்குதல்கள் குறித்து ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரானுடன் சமாதான முயற்சிகளில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை முன்னெப்போதையும் விட அதிக தீவிரத்துடன் மீண்டும் தொடங்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்க கப்பல்களில் இதுவரை இல்லாத வகையில் அதிநவீன ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் நிரப்பி வருவதாகவும். அமைதி உடன்பாடு எட்டப்படாவிட்டால், அவற்றை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில், ஈரானியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியடையுமா என்பது இன்னும் 24 மணிநேரத்தில் தெரிந்துவிடும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரானின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் வெளியிட்ட அவர், நேருக்கு நேர் பேசும்போது அணு ஆயுதங்களைக் கைவிடுவதாகக் கூறும் அவர்கள், ஊடகங்களிடம் மட்டும் அணுசக்தி செறிவூட்டல் பற்றிப் பேசுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால், ஈரானியர்கள் உண்மையைச் சொல்கிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.