கிம் ஜொங்-உனை சந்திக்க காத்திருக்கும் ட்ரம்ப்
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உன்னை பொருத்தமான நேரத்தில் சந்திக்க எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங்கை அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வட கொரியாவின் கிம் ஜாங் உன்னுடன் ஒரு நல்லுறவு இருப்பதாகவும் அது அப்படியே நீடிக்கும் என தான் நம்புவதாகவும் ட்ரம்ப் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் புகழாரம்
அத்துடன், கடந்த முறை கிம் ஜொங்-உன்னை சந்தித்த போது, முதன்முறையாக ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு அவரை அழைத்து சென்றதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
நீங்கள் இதற்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பொன்றுக்கு சென்றதில்லையா என தான் கிம் ஜொங்-உன்னிடம் வினவியதாகவும் அவர் அதற்கு இல்லை என பதிலளித்ததாகவும் ட்ரம்ப் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வடகொரியா மிகவும் ஆற்றல் மிக்க ஒரு நாடு என கிம் ஜொங்-உன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, மீண்டும் அவரை எப்போது சந்திப்பீர்கள் என செய்தியாளர் ஒருவர் வினவிய நிலையில், பொருத்தமான நேரம் வரும் போது சந்திப்பு நடக்கும் என ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



