ஹமாஸிற்கு ஞாயிறு வரையில் கால அவகாசம் வழங்கியுள்ள டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசா சமாதானத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள ஹமாஸ் இயக்கத்திற்கு கடைசி அவகாசம் வழங்கியுள்ளார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தாவிட்டால் ஹமாஸ் இயக்கம் இதுவரை காணாத அளவிற்கு நரகத்தை எதிர்நோக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் உடன்பாடு எட்டப்பட வேண்டும் என ட்ரம்ப், தனது ட்ரூத் சமூக தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எதாவது ஓர் வழியில் மத்திய கிழக்கில் சமாதானம் நிலைநாட்டப்படும் என அவர் மேலும் பதிவிட்டுள்ளார்.
நிராகரிக்க வாய்ப்பு
இந்தத் திட்டத்தின் படி, உடனடி போர் நிறுத்தம் மற்றும் 72 மணி நேரத்திற்குள் ஹமாஸ் தடுத்து வைத்திருக்கும் 20 இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவித்தல் மற்றும் உயிரிழந்ததாக கருதப்படும் சிலரின் உடல்களை ஒப்படைத்தல் போன்ற நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என சமாதான திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ட்ரம்பின் இந்த சமாதான திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள செய்யும் வகையிலான அழுத்தங்களை அரபு நாடுகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், ஹமாஸ் ஆயுதப் பிரிவின் மூத்த தலைவர் ஒருவர், இந்தத் திட்டத்தை நிராகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமாதான திட்டம்
இந்தத் திட்டம் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு ஆகியோரால் வெள்ளை மாளிகையில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் இனி காசா நிர்வாகத்தில் பங்கு பெற முடியாது என்றும், எதிர்காலத்தில் பாலஸ்தீன அரசை உருவாக்க வாய்ப்பு திறந்துவைக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹமாஸ் இந்த சமாதான திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், இஸ்ரேலுக்கு ஹமாஸை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழுமையாக ஆதரவு தரும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



