பதவியிலிருந்து விலகுகிறார் ட்ரம்ப் நிர்வாகத்தின் சிரியாவுக்கான சிறப்பு தூதுவர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் சிரியாவுக்கான சிறப்புத் தூதுவர் டாம் பராக், அவரது அதிகாரப்பூர்வ பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அந்தப் பதவியிலிருந்து விலகுகிறார் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இருப்பினும், அவர் சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கான அமெரிக்கக் கொள்கைகளை நிர்வகிப்பதில் தொடர்ந்து ஒரு முக்கிய இராஜதந்திரப் பாத்திரத்தை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கொள்கைகள்
பில்லியனரான ரியல் எஸ்டேட் முதலீட்டாளரும், ஜனாதிபதி டிரம்பின் நீண்டகால நம்பிக்கைக்குரியவருமான டாம் பராக், மே 2025 முதல் சிரியாவுக்கான சிறப்புத் தூதுவராகப் பணியாற்றி வந்ததோடு, அதே நேரத்தில் துருக்கிக்கான அமெரிக்கத் தூதுவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

டாம் பராக்கின் சிறப்புத் தூதுவர் என்ற பதவிப் பெயர் முடிவுக்கு வந்தாலும், சிரியா, ஈராக் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கான கொள்கைகளை ஒருங்கிணைக்கும் வொஷிங்டனின் முதன்மைப் பொறுப்பாளராக அவரே நீடிப்பார் என்று சர்வதேச சிந்தனைக் குழுவான 'இன்டர்நெஷனல் கிரைசிஸ் குரூப்' தெரிவித்துள்ளது.
இதனால் அமெரிக்காவின் கொள்கைகளில் நடைமுறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றும், சிரிய விவகாரத்தில் வொஷிங்டன் தொடர்ச்சியான அணுகுமுறையையே விரும்புகிறது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தனது ஓராண்டு கால பதவிக் காலத்தில், சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அகமது அல்-ஷாரா தலைமையிலான புதிய நிர்வாகத்தை நோக்கி அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கையை மாற்றுவதில் டாம் பராக் முக்கியப் பங்காற்றினார்.
சிரியாவுக்கான சிறப்புத் தூதுவர்
டமாஸ்கஸ் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதற்கும், பிராந்திய நட்பு நாடுகளுடன் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும் அவர் வழிவகுத்தார்.

எனினும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) இறையாண்மை நிதியத்திலிருந்து கணிசமான மூலதனத்தைத் திரட்டியது தொடர்பாக எழுந்த முறைப்பாடுகள், சிரிய குர்திஷ் படைகளுடனான ஒப்பந்தத்தின் போது ஏற்பட்ட விமர்சனங்கள் மற்றும் ஜனநாயகம் தொடர்பான அவரது சர்ச்சைக்கரிய கருத்துக்கள் காரணமாக அவரது பதவிக்காலம் பல்வேறு விவாதங்களுக்கும் உள்ளானது.
தற்போது டாம் பராக்கிற்கு அடுத்ததாக சிரியாவுக்கான சிறப்புத் தூதுவர் பதவிக்கு புதிய நபர் எவரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.