திருகோணமலை பொது வைத்தியசாலையின் இருதய மருத்துவ பிரிவு தொடர்பில் வெளியான சர்ச்சை! (Video)
திருகோணமலை பொது வைத்தியசாலை இருதய மருத்துவ பிரிவினை இடை நிறுத்தம் செய்வதற்கான செயல்திட்டமே முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் காலாநிதி ஶ்ரீ ஞானேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையின் இருதய சிகிச்சை மையமானது வைத்திய சாலை வளாகத்தில் அல்லாது பிறிதொரு இடத்தில் அமைக்கப்பட அரசால் முன்னெடுக்கப்படும் திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று திருகோணமலை ஊடக இல்லத்தில் இன்று (11) இடம்பெற்ற போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
திருகோணமலை பொது வைத்தியசாலையினை இடமாற்றப் போவதாக காரணம் காட்டி ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 2.2 பில்லியன் பெறுமதியான இருதய மருத்துவ பிரிவினை இடை நிறுத்தம் செய்வதற்கான செயல்திட்டமே ஆளுநர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோரால் இடம்பெறுவதாகவும் இதன்போது குற்றம் சாட்டியுள்ளார்.
வைத்திய சாலை ஓரிடத்திலும் இருதய சிகிச்சை மையம் இன்னோரிடத்திலும் அமையும் போது பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாக நேரிடும் என்பதுடன் அங்கு வைத்தியசாலை முற்றாக மாற்றப்படுமாயின் அதற்கு பல வருட காலங்கள் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இது தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுவதற்கும் எதிர்ப்பினை வெளியிடவும்
பொதுமக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.
