பணிப்பகிஷ்கரிப்பில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள்
கிழக்கு மாகாண ரீதியாக இன்று (13) வைத்தியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக, திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு (OPD) முடங்கியதுடன், சிகிச்சைக்காக வருகை தந்த பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
அக்கரைப்பற்று பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி, அந்த வைத்தியசாலை வைத்தியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அடையாள வேலைநிறுத்தம்
இந்தப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளிலும் இன்று அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநோயாளர் பிரிவு முற்றாக இயங்கவில்லை. இதனால் தூர இடங்களிலிருந்து அதிகாலை வேளையிலேயே வருகை தந்த நோயாளர்கள் சிகிச்சையின்றித் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தடையின்றி இயங்கிய பிரிவுகள்
எனினும், பொதுமக்களின் நலன் கருதி அவசர சிகிச்சைப் பிரிவு (ETU), விடுதிகள் மற்றும் பெரும்பாலான கிளினிக் (Clinic) சேவைகள் வழமைபோல் தடையின்றி இயங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட தூரம் பயணம் செய்து சிகிச்சைக்காக வந்த முதியவர்கள் மற்றும் சிறுவர்கள், வைத்தியர்கள் இன்மையால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதைக் காணக்கூடியதாக இருந்தது. அக்கரப்பற்று வைத்தியசாலை விவகாரத்திற்கு உரிய தீர்வு எட்டப்படாவிட்டால் போராட்டம் மேலும் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

