மான் தாக்கி விவசாயி உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்
குருநாகல்- ஹேரத்கம பகுதியில் காட்டு யானைகளிடமிருந்து விவசாய நிலத்தை பாதுகாக்கச் சென்று, வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், மான் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதே சம்பவத்தில் மேலும் ஒருவர் படு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹேரத்கம வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர், பொல்பிதிகம – ஹேரத்கம – கலஹிட்டியாவைச் சேர்ந்த 47 வயதான எம்.ஏ. சமந்த விஜேவர்தன என்பவர் எனவும் இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதே பகுதியைச் சேர்ந்த, 80–85 வயதுக்கு இடைப்பட்ட பஸ்நாயக்க என்ற விவசாயி, மான் தாக்குதலால் விலா எலும்பு முறிந்து, பொல்பிதிகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இருவரும் 11ஆம் திகதி மாலை, ஹேரத்கம வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் அருகிலுள்ள வயல் பகுதியில், காட்டு யானைகளிடமிருந்து தங்களது பயிர்களை பாதுகாக்கச் சென்று, நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முன்னால் சென்ற விவசாயியை மான் தாக்கி குத்துவதை பார்த்த பின்னால் வந்தவர் அவரை காப்பாற்ற ஓடிய போது, அந்த மான் அவரையும் தாக்கியுள்ளது.
கடுமையாக காயமடைந்த இருவரையும் பிரதேசவாசிகள் பொல்பிதிகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், சமந்த விஜேவர்தன அங்கு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவி, தங்களின் மூத்த மகள் அடுத்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும், ஆறாம் வகுப்பில் கல்வி பயிலும் இரட்டை மகள்கள் இருப்பதாகவும் கூறி, கணவரின் மறைவால் குடும்பம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக கண்ணீருடன் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஹேரத்கம வனவிலங்கு காப்பகத்திற்கு வெளியே ஆபத்தான வகை யானைகள், முதலைகள், பாம்புகள் உள்ளிட்ட வனவிலங்குகளை கொண்டு வந்து விடுவிப்பதால், மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், கடந்த 9ஆம் திகதி மான் தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இவ்வாறு ஒரு தாக்குதல் இடம்பெற்றுள்ளதால், பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணாததுடன், உயிரிழந்தவரின் வீட்டுக்குக் கூட இதுவரை வனவிலங்கு திணைக்களத்தைச் சேர்ந்த எவரும் வருகை தரவில்லை எனக் கூறி, பிரதேசவாசிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
மேலும், யானை, கரடி, சிறுத்தை, முதலை, காட்டு மாடு போன்ற விலங்குகளால் ஏற்படும் காயம் அல்லது உயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் நிலையில், மான் தாக்குதலில் உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்கும் எந்தவொரு நடைமுறையும் இல்லை என பொல்பிதிகம பிரதேச செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளிடம் வினவியபோது, சம்பவம் குறித்து பொறுப்பான அதிகாரி ஒருவர் பின்னர் அறிக்கை வழங்குவார் என்பதால் கருத்து தெரிவிக்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.
பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்.. கொந்தளித்த பராசக்தி பட நடிகர் Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam