திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(19) இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜி.எம்.ஹேமந்த குமாரவின் நெறியாழ்கையின் கீழ் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் இடம் பெற்றது.
மக்கள் பிரச்சினைகள்
இதில் மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பான எதிர் கால நடவடிக்கைகள் அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு உட்கட்டமைப்பு சுகாதாரம் கல்வி மேம்பாடு தொடர்பிலும் மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றிய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மாவட்டத்தில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் எந்தவொரு அரசாங்க நிறுவனத்தாலும் மேற்கொள்ளப்பட்டால், அந்தத் திட்டம் பிற தொடர்புடைய அரசாங்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தொடங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் இது ஏற்படக்கூடிய சிக்கல்களைக் குறைக்கும் என்றும், இதற்கிடையில் திட்டங்களை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா கருத்து தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமளித்தார்.
மேலும், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு, அதன்படி செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டன.
நிபந்தனைகள் மீறல்
திண்மக் கழிவுகள் முகாமைத்துவ திட்டம், சுகாதார துறையில் நிலவும் பற்றாக்குறைகள், திருகோணமலை மாவட்டத்தில் சுகாதார பணியாட்கள் ஆளணி வெற்றிடங்கள், எதிர்வரும் மழை காலத்தில் அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய இடங்களை இனங்கண்டு தயார்நிலையில் இருத்தல், திருகோணமலை மாநகர சபையின் கீழ் நிர்வகிக்கப்படும் நீச்சல் தடாகம், களப்பு பகுதியிலுள்ள அரச காணிகளை அத்துமீறி பிடித்தல் மற்றும் அனுமதியற்ற நிர்மாணங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல், தாயிப் நகர் மற்றும் சதாம் நகர் புகையிரத கடவைகளில் இரட்டை தண்டவாள பாதைகளை அமைத்தல் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டன.
திருகோணமலை மற்றும் கந்தளாய் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்து விளக்கமளித்தனர். சட்டவிரோதமான மணல் அகழ்வு, போக்குவரத்து, மணல் அகழ்வு அனுமதிப் பத்திர நிபந்தனைகள் மீறல் மற்றும் அதற்கெதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள், பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுதல் போன்ற பல விடயங்களை முன்னிலைப்படுத்தினர்.
பிரிவெனா கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான மாதாந்த போக்குவரத்து அட்டை வழங்குதல். (கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு), அரசடி சென்ஜோசப் மீனவர் கூட்டுறவு சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பட்டிணமும் சூழலும் பிரதேச மீனவர்களுடன் தொடர்புடைய பிரச்சனைகள், யான் ஓயா நீர் நிலையம் மூலம் மொறவெவ மற்றும் கோமரன்கடவல பிரதேசங்களுக்கு நீர் வழங்கப்பட முன் கால்வாய் கட்டுமான திட்டத்திற்கு அனுமதி வழங்குதல், கந்தளாய் லீலாரத்தின விளையாட்டு மைதானத்தில் நீச்சல் தடாகம் உட்பட உள்ளக கபடி மைதானமும் அமைப்பதற்கான அனுமதி பெறுதல், அடுத்த 03 ஆண்டுகளுக்கான மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தை உருவாக்க உப குழுவை நியமித்தல், திருகோணமலையில் பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகப் பகுதிகளில் புதிய தகனக்கூடம் கட்டுவதற்கான அனுமதி பெறுதல், குச்சவெளி பிரதேசத்தில் மீள்குடியேற்ற காணி பிரச்சினை, சமனல வாவியை புனர்நிர்மாணம் செய்தல், வனவளப்பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களை விடுவித்தல் போன்ற விடயங்கள் முன்மொழியப்பட்டன.
அபிவிருத்திக்குழுவின் அனுமதி
மேலும் அறபா நகர் பாலம் புனர்நிர்மானப் பணிகள் நடைபெறுவதனால், அதற்காக மாற்று போக்குவரத்து வசதியினை ஏற்பாடு செய்தல், வரோதய நகர் வீதியில் கரையோரப் பூங்கா அமைத்தலுக்காக வனபரிபாலன திணைக்களத்திடம் காணி கோரல், கன்னியா வெந்நீரூற்றுப்பகுதியை சபைக்கு பாரதீனப்படுத்தல், நாட்டின் நெல் உற்பத்தியினை பெருக்குவது தொடர்பாகக் கடந்த நான்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளின் முடிவுகளை அறிதல், பயன்படுத்தப்படாத அரச கட்டிடங்களை உரிய திணைக்களங்களிடமிருந்து மீளப்பெற்று சுற்றுலா அதிகார சபைக்கு அல்லது மாகாண சுற்றுலாப் பணியகத்திற்கு வழங்குவதன் மூலம் திருகோணமலை மாவட்ட சுற்றுலாத்துறையினை ஊக்குவிக்க முடியும் போன்ற பல விடயங்கள் முன்மொழியப்பட்டன.
அத்துடன் பல அபிவிருத்தி தொடர்பான திட்டங்களும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதிக்காக முன்மொழியப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப், ரொசான் அக்மீமன உட்பட மாகாண பிரதம செயலாளர்,உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள்,திணைக்கள தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள்,முப்படைகளின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



