சுமேதங்கரபுரத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதாகக் கூறி திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சூடான விவாதம்
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் (15.10.2026) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றபோது, சுமேதங்கரபுரத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரம் தொடர்பில் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வீதியொன்றை புனரமைப்பதற்காக மூன்று இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட விடயம் தொடர்பிலேயே இந்த விவாதம் ஏற்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, குறித்த வீதிப் புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகை மூன்று இலட்சம் ரூபாய் அல்ல, முப்பது இலட்சம் ரூபாய் எனத் தெரிவித்தார்.

பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் தகவல்
இது அச்சுப் பிழை என்பதை அறிந்திருந்தும், உரிய தகவல்களைச் சரிபார்க்காமல் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வெள்ளைத்தம்பி சுரேஷ் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் தகவல்களைப் பரப்பியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்த பிரதேச சபைத் தலைவர், குறித்த நிதி ஒதுக்கீடு மூன்று இலட்சம் ரூபாய் எனப் பிரதேச செயலாளரும் தமக்கு உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
அவ்வாறிருக்கையில், மேலதிகமாகத் தகவல்களைச் சரிபார்க்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அபிவிருத்திப் பணி
இதற்கிடையில், வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக சுமேதங்கரபுரத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு குறைந்தளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பிரதேச சபைத் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், தமது அரசாங்கம் இனவாத அடிப்படையில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், இனவாத அடிப்படையில் நிதியைப் பிரித்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் அரசியல் அணுகுமுறையை மக்கள் ஏற்கனவே தோற்கடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து, குறித்த பிரதேச சபை தவிசாளர் கூட்ட மண்டபத்திலிருந்து வெளியேறிச் சென்றார்.
