தமிழீழ கொள்கைக்கு சார்பாக நடக்கும் அரசு....புத்தர் சிலை சம்பவத்தில் இனவாதம் பேசும் சரத் வீரசேகர
திருகோணமலை நகரிலுள்ள சர்ச்சைக்குரிய புத்தர் சிலையை 2004 ஆம் ஆண்டு தழிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் சண்டையிட்டுத் தான் பாதுகாத்தோம் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
திருகோணமலை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (19.01.2026) வந்தவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர்,
அரசாங்கத்தில் உள்ள பிரபாகரன்கள்
தற்போதைய நிலையில் அரசாங்கத்தில் மற்றும் கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தில் இருக்கும் பிரபாகரன்களிடம் இருந்து இந்த சிலையை பாதுகாக்க போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.
இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும். தேரவாத பௌத்த நாட்டில் இவ்வாறான ஒரு நிலை இருள் சூழ்ந்த காலகட்டமாகும்.அதாவது புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு முயற்சித்த பிக்குகள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

மதஸ்தலத்திற்கான உறுதி இருக்கும் இந்த காணியில் புத்தர் சிலை அமைப்பது சட்டவிரோதமானது என்றால்,கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஏனைய மதஸ்தலங்கள் மற்றும் கட்டிடங்களும் அகற்றப்பட வேண்டும்.
மேலும் கரையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்து கோயிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும் அதை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
ஆனால் புத்தர் சிலை அகற்றல் பௌத்த தர்மத்துக்கு எதிராக அரசாங்கம் திட்டமிட்டு செய்யும் செயற்பாடாகவே நான் பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.