திருமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து சபையில் குகதாசன் எம்பி முன்வைத்த கருத்து
இந்த இனவாதிகளின் கூச்சலுக்கு எடுபடாமல் அமைதி காத்து வரும் திருகோணமலை வாழ் சிங்கள, தமிழ் மக்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள் என திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வில் நேற்று (21) கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், "நான் திருகோணமலை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன் என்ற வகையில் இப்பொழுது திருகோணமலை மாநகரில் எழுந்துள்ள சிக்கல் பற்றி ஒரு தெளிவையும் அதன் உண்மைத் தன்மையையும் இந்த மேலான அவைக்கு எடுத்துக் கூற விரும்புகின்றேன்.
திருகோணமலை மாநகர மணிக் கூட்டு கோபுரத்தில் இருந்து பிரட்றிக் கோட்டை வாசலுக்கு செல்லும் சாலையை முகவரியாகக் கொண்டு; 1957 ஆம் ஆண்டில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதி வர்த்தன சமிதிய என்னும் ஓர் அறக்கட்டளை பதியப்பட்டுள்ளது.
புத்த விகாரை
இது 2003 ஆம் ஆண்டில் ஒரு தர்ம பள்ளி நடத்தும் நிலையமாக மாற்றம் பெற்றுள்ளது. அத்தோடு இது 2010 ஆம் ஆண்டில் ஒரு புத்த விகாரையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட வேளையில், இது 1951 ஆம் ஆண்டில் இருந்து செயற்பட்டு வருவதாக கூறப்பட்டு உள்ளது.இந்த இடம் இப்பொழுது சங்கமித்தை விகாரை என்றும் அழைக்கப் படுகின்றது. இது முதலாவது இடமாகும்.
இது இவ்வாறு இருக்க , டொக்யாட் வீதியில் இருந்து பிரட்றிக் கோட்டை வாசலுக்கு செல்லும் சாலையில் மேற்படி ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதி வர்த்தன சமிதிய அமைப்பின் விண்ணப்பத்தின் பேரில் 40 பேர்ச் பரப்பளவு உள்ள வேறு ஒரு காணி அன்றைய குடியரசுத் தலைவரான மகிந்த இராஜபக்சவால் 2008 ஆம் ஆண்டு நீண்ட காலக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த காணிக்கு 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் நாள் குடியரசுத் தலைவரான மகிந்த இராஜபக்சவால் நீண்ட கால குத்தகையை மாற்றி உறுதி வழங்கப் பட்டுள்ளது . இது இரண்டாவது இடமாகும்” என கூறினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |