விடுதலைப் புலிகள் இதை செய்யவில்லை! திருமலை புத்தர் சிலை விவகாரத்தால் சபையில் சீற்றமடைந்த சாணக்கியன்
திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் 30 வருட யுத்தக் காலத்தில் கூட அவர்கள் பௌத்த இனத்தின் எந்தவொரு பௌத்த சின்னங்களும் அவர்களால் அழிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சட்டவிரோத விடயம் ஒன்றுக்கு ஆதரவளிக்காதீர்கள்..
இன்றைய சபை அமர்வின்போது அவர் இது குறித்து கடும் தொனியில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நீங்கள் அரசியல் செய்வதற்காக சட்டவிரோத விடயம் ஒன்றுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்பதை தயாசிறி ஜயசேகரவுக்கு தெரிவிக்கின்றேன்.
நேற்றையதினம் திருகோணமலை கடற்கரையிலே சட்டவிரோதமான ஒரு விகாரை புதிதாக உருவெடுத்தது. கோட்டாபய, மகிந்த காலத்தில் இது போன்ற செயற்பாடுகள் நடந்தன. ஆனால், இந்த அரசாங்கத்திலும் ஒரு சில பௌத்த பிக்குகளால் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த புத்தர் சிலை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை கைவிடப்படும் என்று நினைத்தோம். இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு நான் அறிவித்திருந்தேன்.
நேற்று இரவு நடந்த குழப்பகரமான சூழ்நிலைகளை அடுத்து இந்த அரசாங்கம் சாதகமான முடிவை அறிவிக்கும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால், பொது பாதுகாப்பு அமைச்சரும், சிலையை பாதுகாக்கவே எடுத்துச் சென்றோம், சிலையை அங்கு வைத்தது தவறில்லை என்று கூறியுள்ளார்.
அமைச்சருடைய இந்த கருத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். 30 வருடங்கள் யுத்தம் நடைபெற்ற வடக்கு கிழக்கில், எந்தவொரு பௌத்த சின்னங்களும் விடுதலைப் புலிகளால் கூட அழிக்கப்படவில்லை. தமிழ் மக்கள் இரவோடு இரவாக சென்று சிலைகளை உடைக்கின்ற மக்கள் அல்ல.
சட்டவிரோதமான விடயங்களை எதிர்த்தாலும், இன்னொரு மதத்தின் சிலையை உடைக்கின்ற அளவுக்கு கேவலமான எண்ணம் கொண்ட இனம் தமிழினம் அல்ல. ஆனால், சைவ ஆலயங்களையும், கிறிஸ்தவ ஆலயங்களையும் அழித்த இனமும் இங்கு இருக்கின்றது.