திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (16) மாலை பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த கூட்டமானது மூதூர் பிரதேச செயலாளர் எம். பி. எம் முபாரக்கின் நெறியாழ்கையில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திர தலைமையில் இடம்பெற்றது.
அபிவிருத்தி நடவடிக்கைகள்
இதன்போது பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறை குறைகள் என பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப், மூதூர் பிரதேச சபை தவிசாளர்,பிரதேச சபை உறுப்பினர்கள்;திணைக்கள தலைவர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், முப்படையினர் என பலரும் கலந்து கொண்டனர்.
மூதூர் பிரதேச செயலளார் பிரிவில் அடங்கும் நல்லூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள மலைமுந்தல் என்னும் இடத்தில் வாழும் மக்களுக்கு சொந்தமான உறுதிக் காணிகளை சுற்றி வனத்துறை போட்ட எல்லைக்கற்களை அகற்றுவதாக வனத்துறை மூதூர் பிரதேச செயலாருக்கு எழுத்து மூலம் ஒப்புதல் அளித்துள்ள போதும் இதுவரை எல்லைக்கற்களை அகற்றவில்லை. அதனை விரைந்து அகற்ற ஆவன செய்ய வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், மூதூர் பிரதேச சபையானது சேகரிக்கின்ற குப்பைகளை கொட்டுவதற்கான இடம் இல்லாமல் இன்னல் படுகின்றது. இந்தச் சிக்கலை தீர்க்க குப்பை கொட்டுவதற்கு பொருத்தமான இடம் ஒன்றை வழங்க ஆவன செய்ய வேண்டும்.
சம்பூர் - திருகோணமலை போக்குவரத்து
கிளிவெட்டி கிராம இந்து மயானத்தினை ஒருசிலர் அத்துமீறி பிடித்து வருவதனால் அதனை அளவீடு செய்து எல்லைப்படுத்த ஆவன செய்தல். சேனையூர் கிராம சேவகர் பிரிவில் அடங்கும் சீதனவெளி கிராமத்திற்கு குழாய் நீர் விநியோக வேலை மந்தகதியில் உள்ளது அதனை துரிதப்படுத்த ஆவன செய்ய வேண்டும்.
கட்டை பறிச்சான் பாலத்தில் இருந்து கெவிலியா நோக்கி செல்லும் RDD க்குச் சொந்தமான வீதி நீண்டகாலமாக பராமரிப்பு இன்றி உள்ளது அதனை மறுசீரமைக்க ஆவன செய்தல் . மூதூர் கிழக்கு பிரதேசத்தில் உள்ள வயல் காணிகளுக்குள் இருக்கும் அல்லது அருகிலுள்ள மலைகளை பாரிய வெடி வைத்துத் தகர்தலை நிறுத்துதல்.
சம்பூர் - திருகோணமலை போக்குவரத்திற்காக மேலும் ஒரு பேருந்து சேவை நடத்த ஆவன செய்ய வேண்டும். மணற்ச்சேனை கிராமிய வைத்திய சாலையினை மேம்படுத்தி வினைத்திறனுடன் இயங்க வைத்தல். கங்குவேலி கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் 35 குடும்பங்கள் குடிநீர் இன்றி இன்னல் படுகின்றனர்.
இவர்களுக்கு தேவையான பிரதான குடிநீர்க் குழாய் இணைப்பை வழங்க ஆவன செய்ய வேண்டும். கிளிவெட்டி கிராம சேவகர் பிரிவில் அடங்கும் கிரான் குளத்தினை ஒருசிலர் அத்துமீறி பிடித்து வருவதனால் அதனை அளவீடு செய்து எல்லைப்படுத்த ஆவன செய்தல். மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சம்பூர் கிராமத்தில் மீன்பிடித்துறை நிறுவ ஆவன செய்ய வேண்டும். 3.5 கிலோ மீற்றர் நீளமான நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான கிரான்குளம் (கிளிவெட்டி – இலிங்கபுரம்) விவசாய வீதியானது நீண்டகாலமாக பராமரிப்பு இன்றி மறுசீரமைக்கப்படாமையினால் அதனை பயன்படுத்துகின்ற விவசாயிகள் அதிக சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனை விரைந்து மறுசீரமைக்க ஆவன செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட முன்மொழிவுகளுக்கான சாத்தியமான தீர்வுகள் 2025.08.13 ஆம் நாள் நடைபெறவுள்ள அடுத்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு முன்பு வழங்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது என மேலும் தெரிவித்தார்.




