டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து விலகிய இரு நீதியரசர்கள்
இலங்கையின் பிரஜாவுரிமை இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு(Diana Gamage) எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரணை செய்வதிலிருந்து இரண்டு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் விலகிக்கொண்டுள்ளனர்.
டயானா கமகேவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழுவின் உறுப்பினர்கள் என்பதை காரணம் காட்டி, நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோர், இந்த மனுவை விசாரிப்பதில் இன்று(26) இருந்து விலகிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவமதிப்பு மனு தாக்கல்
2024 மே மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது டயானா கமகே தனது அறிக்கைகள் மூலம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தை செய்ததாக, உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு இந்த மனுவை ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஏற்றுக்கொண்ட நிலையில் விசாரணையை ஒத்திவைத்திருந்தது.
வெலிகம நகர சபையின் முன்னாள் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்றும், அவருக்கு இலங்கையின் குடியுரிமை இல்லாததால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்றும் உயர்நீதிமன்றம், மே 8ஆம் திகதியன்று தீர்ப்பளித்திருந்தது.
அரசியல் சதி
எனினும் அதன் பின்னர் ஊடகவியலாளர் மாநாட்டில், கருத்துரைத்த பிரதிவாதியான டயானா கமகே தாம் அநீதிக்கு ஆளானதாக தெரிவித்திருந்தார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பெண்களுக்கு எதிரான தாக்குதல் என்றும், மேலும் இது வெறுப்பு மற்றும் அரசியல் சதியின் விளைவாகும் என்றும் அவர் தெரிவித்திருந்ததாக மனுதாரர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்ற அடிப்படையில் தீங்கிழைக்கும் வகையில் பிரதிவாதி கருத்துக்களை வெளியிட்டதாக மனுதாரரான வெலிகம நகர சபையின் முன்னாள் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |