ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்து போக்குவரத்து தடை
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பெரிய மரமொன்று திடீரென முறிந்து விழுந்ததில், போக்குவரத்து சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(23.07.2026) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மரம் வீதியின் குறுக்கே விழுந்த காரணத்தினால் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளுக்குச் செல்ல முயன்ற பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கடும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும், பிரதேச மக்கள், தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொதுமக்கள் சிரமம்
இயந்திரங்களின் உதவியுடன் மரம் வெட்டப்பட்டு அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, சில மணிநேரங்களுக்குப் பின்னர் போக்குவரத்து மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளது.

மரம் அகற்றப்படும் வரை, மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிர்ச் சேதமோ காயமோ எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அண்மைக்காலமாக நிலவும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக வீதியோரங்களில் உள்ள பழமையான மரங்கள் ஆபத்தான நிலையில் காணப்படுவதால், அவற்றை உடனடியாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


