இலங்கையின் அரச கடன் முகாமைத்துவ அலுவல ஊழியர்கள் தொடர்பில் திறைசேரியின் தீர்மானம்
இலங்கையின் அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் (PDMO) ஊழியர்களின் ஊதியங்கள் தேசிய அரச சேவை சம்பள அளவீடுகளுக்கு இணங்கவே தீர்மானிக்கப்படும் என திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஆனந்த கித்சிறி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதனை ஊடகமொன்று கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறைவாக சம்பளம் பெறும் ஊழியர்கள்
புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் சம்பளக் கட்டமைப்பை, இலங்கை மத்திய வங்கியின் (CBSL) சம்பளத் தரத்துடன் ஒப்பிட்டு மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் நிராகரித்துள்ளார்.
இந்த அலுவலகத்தின் ஊழியர்கள் அனைவரும் ஓய்வூதியம் பெறக்கூடிய அரச ஊழியர்கள், எனவே அவர்களின் சம்பளம் தேசிய பொதுத்துறை சம்பளக் கொள்கையின் கீழ் அமையும் என விளக்கம் கொடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், விசேட திறமைகளைக் கொண்ட ஆலோசகர்கள் அல்லது நிதித்துறை நிபுணர்களை எதிர்காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளும் போது மாத்திரம் அவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படலாம்.
தற்போது அத்தகைய வெளிவாரி நிபுணர்கள் எவரும் பணியமர்த்தப்படவில்லை.
மத்திய வங்கியின் கடன் முகாமைத்துவப் பணிகள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய வங்கியுடன் ஒப்பிடுகையில் PDMO ஊழியர்களின் சம்பளம் குறைவாகக் காணப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்தத் தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
PDMO பணி மாற்றம்
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த PDMO பணிப்பாளர் நாயகம் உதெனி உடுகஹபத்துவ,
சம்பள விடயம் ஊழியர்களிடையே ஒரு பிரச்சினையாக இல்லை, தற்போதைய முக்கிய சவாலானது ஊழியர்களின் திறனை வளர்ப்பதே என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கியின் அரச கடன் திணைக்களம் (PDD) கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் மூடப்பட்டு, அதன் அனைத்து பணிகளும் தற்போது PDMO விற்கு மாற்றப்பட்டுள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது.