ஊக்கத்தொகை வழங்குவதை கடுமையாக்கும் திறைசேரி: சிக்கலில் அரச அதிகாரிகள்
இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு, ஊக்கத்தொகைக்கான பணம் செலுத்துவதில் திறைசேரி கடுமையான கொள்கையை கடைப்பிடிக்கவுள்ளது.
முன்னதாக அதிகாரிகளுக்கு ஊக்கத்தொகையை செலுத்துவதற்காக, திணைக்களம், 453 மில்லியன் ரூபாய்களை, திறைசேரியிடம் கோரியிருந்தது.
இந்தநிலையில், அடுத்த வாரம் உள்நாட்டு இறைவரித்திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடும்போது, நிர்ணயித்த இலக்குகளை அடைவதற்கு ஏற்பவே, ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பது வலியுறுத்தப்படும் என்று திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட வருமான இலக்கு
இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு 30,000 புதிய வரிக் கோப்புகளைத் திறக்கவேண்டும் என்று திறைசேரி, வருமானவரித் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் இந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 550 பில்லியன் ரூபாயை மேலதிக வரி வருமானமாக பெறமுடியும் என்று திறைசேரி தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வருடத்துக்கான வரி வருமானம், 2,200 பில்லியன் என்ற திருத்தப்பட்ட வருமான இலக்குடன் 1,667 பில்லியன் ரூபாய்கள் என்ற இலக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய வருவாய் இலக்குகள் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளுக்கு ஏற்பவே மேற்கொள்ளப்படுகிறது. எனவே வருமானத்தின் வரிகள் அவசியமானவை என்று திறைசேரியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.