நள்ளிரவில் சிகிரியாவில் தோண்டப்பட்ட நிலம்! அரசு இலச்சினை வாகனத்துடன் சிக்கிய மூவர்
சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில், நடு இரவில் ஹேமர் இயந்திரத்தைக் கொண்டு நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த மூவர் சந்தேகத்தின் பேரில் சிகிரியா வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிகிரியா வனவிலங்கு அலுவலகப் பிரதானியும் வனவிலங்கு கட்டுப்பாட்டாளருமான எஸ்.எஸ்.மலிந்தவுக்குக் கிடைத்த இரகசியத்தகவலின் அடிப்படையில், சிகிரியா சரணாலயப் பகுதிக்குள் வனவிலங்கு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
மூவர் கைது
குறித்த பகுதியில் தேசிய நீர் வழங்கல் வாரியத்துக்குச் சொந்தமானது என குறிப்பிடும் அரசு இலச்சினை பொறிக்கப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததை கண்ட அதிகாரிகள், நிலத்தை தோண்டிக்கொண்டிருந்த மூவரை கைது செய்துள்ளனர்.

தாம் நீர் இணைப்பு வழங்குவதற்காகவே தோண்டுவதாக அவர்கள் தெரிவித்த போதிலும், நள்ளிரவு வேளையில் அது தொடர்பில் சரியான பதிலளிக்க தவறியுள்ளனர்.
இதனையடுத்து, பாறைகளைத் துளையிடும் ஹேமர் இயந்திரம் மற்றும் அகழ்வாராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கருவிகள் கைப்பற்றப்பட்டன.
நீதிமன்றத்தில் முன்னிலை
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தம்புள்ளை நீர் வழங்கல் வாரியத்தில் பணிபுரிபவர்கள் என்றும், மற்றவர் அந்த நிலத்தின் உரிமையாளர் என்றும் வனவிலங்கு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஹேமர் இயந்திரத்தின் முனை தேய்ந்திருப்பதைக் கொண்டு, இவர்கள் இதற்கு முன்னரும் வேறொரு இடத்தில் இவ்வாறான செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று திங்கட்கிழமை தம்புள்ளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.