பரீட்சைக்காக செலவிடப்பட்டுள்ள கோடிக்கணக்கான பணம்! விண்ணப்பித்தும் வருகை தராத மாணவர்கள்
க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான பொதுத்தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கு (GIT) விண்ணப்பித்திருந்த கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் பரீட்சைக்கு வருகை தரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக 9 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வீணடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆண்டு செயல்திட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று முறை நடத்தப்பட்ட பரீட்சை
பொதுத் தகவல் தொழில்நுட்ப பாட பரீட்சை 2019 முதல் 2024 வரை ஆறு ஆண்டுகளில் மூன்று முறை நடத்தப்பட்டுள்ளது.

இந்த பரீட்சை மூன்று முறை நடத்தப்பட்ட நிலையில், க.பொ.த உயர் தர பரீட்சைக்கு வந்த மாணவர்களில் 36 சதவீதம் பேர் பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கு விண்ணப்பிக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுத் தகவல் தொழில்நுட்பப் பாடத்திற்கு விண்ணப்பித்த மாணவர்களில் 42 சதவீதம் பேர் பரீட்சைக்கு வரவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த பரீட்சையை நடத்துவதற்காக பல மில்லியன் ரூபாய் செலவிடப்பட்ட போதிலும், எதிர்பார்க்கப்பட்ட இலக்குகள் அடையப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
பரீட்சை நடத்தப்பட்ட மூன்று சந்தர்ப்பங்களிலும், மதிப்பீட்டுச் செலவுகள் நீங்கலாக, விண்ணப்பித்து வராத மாணவர்களுக்காக பல கோடி ரூபாய் வீணாக செலவிடப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.