TRCயில் பதிவு செய்யாத கடைகள் சுற்றிவளைப்பு : அபராதம், 3 வருட சிறைத்தண்டனை
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத தொலைபேசி கடைகளை கண்டறிய பொலிஸாருடன் இணைந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உரிமம் பெறாத கடைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
பொலிஸாரின் உதவியுடன் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யுமாறு தொலைபேசி விற்பனையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணையகத்தின் பணிப்பாளர் மேனகா பத்திரண தெரிவித்தார்.
அபராதம்
ஆண்டுதோறும் வழங்கப்படும் தொடர்புடைய உரிமத்தைப் பெறுவதற்கு 150000 ரூபாய் செலவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இனிமேல் இந்த உரிமம் இல்லாமல் ஒரு தொலைபேசி அல்லது தொலைபேசி கருவிகளை விற்பனை செய்யப்பட்டால், ஒரு லட்சம் ரூபாய்க்கு குறையாத ஒரு மில்லியன் ரூபாய்க்கு அதிகரிக்காமல் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
உரிமங்கள் இல்லாத கடைகள் குறித்து ஏற்கனவே பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத வணிகர்கள் இருந்தால், உடனடியாக உரிய உரிமத்தைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.