பயணத்தடை காரணமாக பட்டினியில் தவிக்கும் கற்குளம் மக்கள்
கோவிட் தொற்றை தடுப்பதற்காக பயணத்தடை அமுல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியாவில் பல கிராமப்புறங்களில் வாழும் தினக்கூலி மக்கள் தொழில் வாய்ப்பின்றி குடும்பத்துடன் பட்டினியில் வாடி வருகின்றதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிதம்பரபுரம், கற்குளம் படிவம் பகுதியில் சுமார் 80இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த பகுதியில் வாழும் மக்கள் அன்றாடம் விறகு வெட்டுதல், மேசன் வேலை, கூலி வேலைகளுக்கு சென்று அதன் மூலம் பெறப்படுகின்ற வருமானத்திலேயே தனது குடும்பச் செலவை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இப்பகுதியில் மலையகத்தைச் சேர்ந்தவர்களும் தஞ்சம் புகுந்து வாழ்கின்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இங்கு குடியேறி ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி தாம் வாழ்ந்து வருவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கைக்குழந்தைகள், முதியவர்களுடன் குடிசை வீடுகளில் வாழ்ந்து வரும் நிலையில் தற்போது உணவின்றி பட்டிணியில் வாடுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளமையினால், நோயாளிகளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதிலும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றதாக தெரியவருகிறது.
இவர்கள் தொடர்பில் குறித்த அதிகாரிகள் கவனம் செலுத்தி இப்பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்தல் அவசியமாகும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


