வினோத பயணங்களுக்காக பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வினோத பயணங்கள் அல்லது வேறு அவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக , அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காகவே மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் சுகாதார சட்டதிட்டங்களைத் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றவில்லை என்றால், கோவிட் அலை மீண்டும் ஏற்படக்கூடும்.
மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் இன்று அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தியது.
புதிய சாதாரண நிலைமையில் கீழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்காக மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக அமுலிலிருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
