பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணத்தடை விதிப்பு!
பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இஸ்ரேல் தடை விதித்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரித்தானியா, ஜார்ஜியா, சைப்ரஸ் மற்றும் துருக்கி ஆகிய 4 நாடுகளுக்கு இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் கோவிட் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், பயணத்தடை குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
கோவிட் பாதிப்பு காரணமாக தனது நாட்டு குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் இந்தியா, அர்ஜென்டினா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, மெக்சிகோ, ரஷ்யா, பெலாரஸ், உஸ்பெகிஸ்தான், ஸ்பெயின் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
எனினும் விதிவிலக்கு குழுவின் சிறப்பு அனுமதி பெற்று பயணம் மேற்கொள்ளலாம். இந்த நாடுகள் தவிர்த்து, பிற 18 நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு கடுமையான எச்சரிக்கையையும் இஸ்ரேல் விடுத்துள்ளது.
இந்த நிலையில், பிரித்தானியா, ஜார்ஜியா, சைப்ரஸ் மற்றும் துருக்கி ஆகிய 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இஸ்ரேல் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,144 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 71 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்திகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஏழு நாட்களில் இங்கிலாந்தில் கோவிட் நேர்மறை வழக்குகள் 33 வீதம் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும், அதேவேளை, உயிரிழப்புகள் 9.2 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், நேற்றைய தினம் 35,773 பேர் கோவிட் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் முதல் அளவு தடுப்பு மருந்தை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 46,811,298 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 164,295 பேர் தடுப்பூசியின் இரண்டாவது அளவு மருந்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இதன்படி, முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 38,126,702 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.