கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன் தொடர்பில் வெளியான தகவல்
சென்னையில் இடம்பெறவுள்ள தமிழ்நாடு அரசின் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்றையதினம் சென்னைக்கு செல்வதற்காக சென்றிருந்த வேளை இவ்வாறு தடுத்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சிறீதரன் தரப்பினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டின் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அயலக தமிழர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக சிறீதரன் அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சிறீதரன் மீது போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, சிறீதரனை தடுத்து நிறுத்துமாறு சிஐடியினர் மூலம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தங்களுடைய கடவுச்சீட்டில் பிழை இருக்கின்றது என்றும், அதனால் நீங்கள் பயணிக்க முடியாது என்றும் சிறீதரனிடம் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக சிறீதரன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீர் நடவடிக்கை
தனது புதிய கடவுச்சீட்டின் ஊடாக சிறீதரன் எம்.பி இதுவரை நான்கு முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்ததாகவும், இதுவரையில் கடவுச்சீட்டில் பிழை இருப்பதாக அறிவிக்கப்பட்டதில்லை என்றும், தற்போது முதல்முறையாக இவ்வாறு அறிவிக்கப்படுவதால் இது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சிறீதரன் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதேவேளை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வின் சிறீதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள நிலையில், சிறீதரனின் இதுபோன்ற நகர்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சிலர் இவ்வாறு தடைகளை ஏற்படுத்தி, இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குவதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
உள்ளக பிரச்சினைகள்
இது போன்ற, முறையற்ற நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் உள்ளக பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தடுத்து நிறுத்தும் போது சில கடப்பாடுகள் இருக்கின்றன எனவும், அவை எதுவும் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
