மகிந்த மற்றும் பசிலுக்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை பயணத்தடையை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரிய மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மனுவில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
குறித்த மனுவில், நிதி முறைகேடுகள் மற்றும் இலங்கை பொருளாதாரத்தின் தவறான நிர்வாகத்திற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இந்த பிரதிவாதிகளில் சிலர் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்றும், அதன் மூலம் மனுதாரர்கள் கோரும் தகவல்களை வழங்குவது தடைப்பட்டு, முறையான விசாரணைக்கு தடை ஏற்படுத்தப்படலாம் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள இடைக்கால நிவாரணம் நீதிமன்றத்தால் வழங்கப்படாவிட்டால், தங்களுக்கும் இலங்கையின் குடிமக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு, பாதிப்பு மற்றும் பாரபட்சம் ஏற்படும் என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.