எதிர்வரும் 23ஆம் திகதிவரை வெளிநாடுகளுக்கு செல்லமுடியாத நிலை உள்ளாகியுள்ள அஜித் கப்ரால்!
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் உத்தரவை எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி வரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று நீடித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி நீதிமன்றம் விடுத்த உத்தரவில், கப்ரால் மே 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்திருந்தது.
எனினும் மே 2 ஆம் திகதியை அரசாங்கம், அரச விடுமுறையாக அறிவித்ததால், இந்த விவகாரம், நீதிவான் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்த விடயங்களை கருத்திற்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.
தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த தனிப்பட்ட மனு ஒன்றின் அடிப்படையில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
500 மில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மை பத்திரத்தை செலுத்த நடவடிக்கை எடுத்தமை காரணமாக, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கப்ராலே காரணம் என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கை மத்திய வங்கிக்கு 2000 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.



