தொடர் சீரற்ற காலநிலையால் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய கிளிநொச்சி மக்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியின் 10ஆம் கட்டை பாலமானது அடிக்கடி சேதமடைவதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாட்டில் கடந்த சில மாதங்களாக இயற்கையின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், ஆங்காங்கே இயற்கை பாதிப்புக்கள் அதிகமாக பதிவாகியுள்ளன.
வீதி விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்
இதற்கமைய, கடந்த டித்வா புயல் காரணமாக இந்திய பொறியியல் பிரிவினால் நிர்மாணிக்கப்பட்ட பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியின் 10ஆம் கட்டை பாலமானது அடிக்கடி சேதமடைந்து போக்குவரத்து சிரமத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சில சமயங்களில், அந்த பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த பாலத்தின் ஊடாக டிப்பர் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் தொடர்ச்சியாக பயணிப்பதன் காரணமாக குறித்த பாலம் அடிக்கடி சேதமடைவதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த பாலங்கள் சேதமடைந்து காணப்படுவதனால் விபத்து ஏற்படும் அபாய நிலை காணப்படுகிறது என்றும், நேற்று (20) மாலை குறித்த பாலத்தில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது என்றும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
