ரிதீ விகாரையை சுற்றுலாத் தலமாக மாற்றுவது தொடர்பில் கலந்துரையாடல்
குருநாகல் மாவட்டத்தின் புகழ்பெற்ற ரிதீவிகாரையை சுற்றுலாத் தலமாக மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது..
அதன் பிரகாரம் வரலாற்றுச் சிறப்புமிக்க குருநாகல் ரிதீ விகாரையை சுற்றுலாத் தலமாக மாற்றும் பரிந்துரை குறித்த ஆரம்ப கட்டக் கலந்துரையாடல், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
எதிர்கால அபிவிருத்திப் பணிகள்
குருநாகல் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள ரிதீ விகாரையை மையமாகக் கொண்டு, அதன் பாரம்பரிய அடையாளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் கட்டமைப்பும் பாதுகாக்கப்படும் வகையில் முறையான அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்து சுற்றுலாத்துறையை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினர்களை ஒன்றிணைத்து, குறுகிய காலத்திற்குள் திட்டங்களைத் தயாரித்து எதிர்கால அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
ரிதீ விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய திப்பட்டுவாவே புத்தரக்கித நாயக்க தேரர், சங்கைக்குரிய ரிதீகம வனரதன தேரர் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.எம். அஸ்லம், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சுரஞ்சித் வேவிட்ட, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சுற்றுலாப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) எச்.பி. சோமதிலக, வடமேல் மாகாண சுற்றுலா அதிகாரசபையின் பணிப்பாளர் ஏ. நாலக சிசிர குமார உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.