சுமார் 25 நாட்கள் கடலில் மிதந்த புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு: 140க்கும் மேற்பட்டோர் பலி!
ஆபிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கி அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கடலில் தத்தளித்ததில், 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் மாயமாகியும் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.
தி கம்பியாவின் பாஃபுலோட்டோ பகுதியிலிருந்து புறப்பட்ட இந்த நடுக்கடல் படகு, எரிபொருள் தீர்ந்ததால் சுமார் 25 நாட்கள் கடலிலேயே மிதந்து தத்தளித்துள்ளது.
கடற்பகுதியில் சோகம்
ஜூலை 18 அன்று மவுரித்தேனியாவின் நௌதிபூ துறைமுகத்தை வந்தடைந்த போது, அதில் 38 பேர் மட்டுமே உயிருடனும் பலரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
உயிர்தப்பியவர்களில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்து தவிக்கும் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் சஹாரா ஆபிரிக்கப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். மவுரித்தேனியக் கடலோரக் காவல் படையின் தகவலின்படி, 160 பயணிகளுடன் புறப்பட்ட இந்த படகில் 122 பேரைக் காணவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை 14 முதல் 18 வரை மவுரித்தேனியா கடலோரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறு மீட்பு நடவடிக்கைகளில் 387 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட போதிலும், இந்த பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.
140க்கும் மேற்பட்டோர் பலி
ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள கேனரி தீவுகளை அடையும் இந்த அட்லாண்டிக் கடல் பாதை, உலகிலேயே மிகவும் அபாயகரமான புலம்பெயர்வுப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தகுதியற்ற மற்றும் அதிக கூட்ட நெரிசல் கொண்ட படகுகளில் நீண்ட தூரம் பயணிப்பதே அதிக அளவிலான உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் மவுரித்தேனிய அரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கை காரணமாக, பெரும்பாலான அகதிகள் நீண்ட மற்றும் அதிக ஆபத்தான கடல்பாதைகளைத் தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கப்படுகின்றனர்.
இளைஞர்கள் இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதைத் தடுக்க கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.