காசாவில் போர்நிறுத்தத்திற்கு மத்தியிலும் தொடரும் சோகம்: நாளொன்றில் ஒரு சிறுவர் பலி என யுனிசெஃப் கவலை
காசாவில் போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு 300 நாட்கள் கடந்துள்ள போதிலும், அங்கு இதுவரை குறைந்தது 300 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெஃப் (UNICEF) கவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, போர்நிறுத்தக் காலத்தில் நாளொன்றிற்கு சராசரியாக ஒரு சிறுவன் வீதம் உயிரிழப்பதாகத் தெரிவித்துள்ள யுனிசெஃப், நூற்றுக்கணக்கான சிறுவர்கள் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
யுனிசெஃப் கவலை
தற்போது காசாவின் மூன்றில் ஒரு பகுதிக்குள்ளேயே மக்கள் முடங்கியுள்ள நிலையில், போரினால் அழிக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியிலேயே தங்கியுள்ளனர்.

அத்துடன் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற குடிநீர் போன்ற பல்வேறு இன்னல்களுக்குச் சிறுவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.
2023 ஒக்டோபர் மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த மோதல்களில் இதுவரை 73,300க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 58,000க்கும் அதிகமான சிறுவர்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.