இலங்கைக்கு வந்த பிரான்ஸ் தம்பதியினருக்கு நேர்ந்த அவல நிலை
ஒஹிய இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையில் உள்ள சுரங்கத்துக்கு அருகில், இன்று தம்பதிகளான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து பலத்த காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தம்பதியினர், கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, சுரங்கத்துக்கு அருகில் முதலில் யுவதி தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, அவரை காப்பாற்ற முயற்சி செய்து, பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து பாய்ந்த இளைஞரும் காயமடைந்து தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸைச் சேர்ந்த இளம் தம்பதியினரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து காயமடைந்த தம்பதியினர் அதே புகையிரதத்தில் ஹப்புத்தளைக்கு கொண்டுவரப்பட்டு, நோயாளர் காவு வண்டி மூலம் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புகையிரதத்தின் கதவு பகுதியில் நின்றவாறு, மேற்படி யுவதி செல்ஃபி எடுக்க முயன்றபோது, தவறி விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



