2072 வரை இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் துயரம்
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபிவிருத்தி செய்து நிர்வகித்தால் எதிர்வரும் காலங்களில் ஏனைய நாடுகளுக்கு கடன் வழங்கக் கூடியளவிற்கு இலங்கையின் பொருளாதாரம் மேம்பாடடையும் என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி (Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் அறிவிக்காமல் , அமைச்சரவைக்கு மாத்திரம் அறிவித்து திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதி அபிவிருத்திக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 24 தாங்கிகளும், இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 14 தாங்கிகளும், இரண்டையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள கூட்டு நிறுவனத்திற்கு 61 தாங்கிகளும் வழங்கப்பட்டுள்ளன.
கூட்டு நிறுவனத்தின் 49 சதவீத உரிமம் இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு என்ற அடிப்படையில் மேலும் 30 தாங்கிகள் இந்தியா வசமாகும். அதற்கமைய 44 எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலங்களில் டொலர் நெருக்கடியின் காரணமாக எஞ்சியுள்ள தாங்கிகளும் இதே போன்று இந்தியாவிற்கு வழங்கப்படும்.
இந்த ஒப்பந்தம் குறித்து வலுசக்தி அமைச்சர் இந்தியாவிற்கு சென்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளாரா? அல்லது இந்திய தரப்பு இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதா? இது குறித்த எந்தவொரு தகவல்களும் இதுவரையிலும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் இவை குறித்து அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
காரணம் இது சாதாரணமானதொரு விடயமல்ல. திருகோணமலை துறைமுகத்திற்கு மிகவும் அருகிலுள்ள எண்ணெய் தாங்கிகளே இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளன. இவை மிக முக்கியத்துவமுடையவையாகும்.
காரணம் இவற்றிலேயே எரிபொருள் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஏனையவை அவற்றை களஞ்சியப்படுத்தி வைப்பவையாகும். எனவே இந்தியாவிடம் மண்டியிட்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
1987 இன் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்தன யுகத்தைப் பற்றி பேசியதைப் போன்று இனிவரும் காலங்களில், ராஜபக்ஷ யுகத்தைப் பற்றி பேசப்படும். எமக்கு இந்தியாவுடனும் , இந்திய மக்களுடன் எவ்வித மோதலும் கிடையாது.
ஆனால் இந்திய அரசு இலங்கையின் அரசியலில் தலையிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. திருகோணமலை இலங்கையின் மிக முக்கிய பொருளாதார கேந்திரமாகும்.
அதன் காரணமாகவே விடுதலைப் புலிகள் தனியாட்சி அமைக்க முற்பட்ட போது, தலைநகராக திருகோணமலையை தெரிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
தற்போது அவ்வாறு முக்கியத்தும் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள தேசிய சொத்தினையே இந்தியாவிற்கு வழங்கியுள்ளோம்.
எண்ணெய் தொடர்பில் இந்தியாவிற்கு தேசிய கொள்கை காணப்படுகிறது. ஆனால் இலங்கைக்கு அவ்வாறு எந்தகொள்கையும் இல்லை.
நாம் இலங்கையை இந்து சமுத்திரத்தின் முத்தாக மாத்திரமே காண்கின்றோம். ஆனால் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் ஆசியாவிற்குள் நுழைவதற்கான பிரதான நுழை வாயிலாகவே இலங்கையை காண்கின்றன. அதன் காரணமாகவே அவை இலங்கையை ஆக்கிரமிப்பதற்கும் போட்டியிடுகின்றன.
திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியில் இலங்கை கொடியை ஏற்றுவதாகக் கூறிய அமைச்சர் கம்மன்பில அதனை முழுமையாக இறக்குவதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுத்துள்ளார்.
நாட்டுக்கு பெருமளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரக் கூடிய இவ்வாறான தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பதற்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். காரணம் இது முழு நாட்டு மக்களுக்கும் பாரதூரமானதாகும்.
இந்த எண்ணெய் தாங்கிகளை இலங்கை சுயமாக அபிவிருத்தி செய்தால் , ஏனைய நாடுகளுக்கு கடன் வழங்குமளவிற்கு பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். அவ்வாறில்லை எனில் 2072 ஆம் ஆண்டாகும் போதும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டிய நிலைமையே ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
