உயர்கல்வி நோக்கங்களுக்காக நாடுகடத்தப்படும் தமிழ் சிறுவர்கள்
இலங்கையில் இருந்து மலேசியாவுக்கு உயர்கல்வி நோக்கங்களுக்காகவே சிறுவர்கள் கடத்தப்படுவதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இந்த வாரம் மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை, சர்வதேச குழந்தை கடத்தல் கும்பலின் உள்ளூர் உதவியாளர் என சந்தேகிக்கப்படும் நபர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்போதே இந்த விடயம் வெளியாகியுள்ளது.
2023 இன் முதல் சில மாதங்களிலும் இதேபோன்று பல சிறுவர்கள் மலேசியாவுக்கு அனுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடவுச்சீட்டுக்களுக்கு அங்கீகாரம்
எந்தவொரு தத்தெடுப்பு அல்லது உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் வழிமுறைகளுக்காக இந்த சிறுவர்கள் கடத்தப்படுவதை புலனாய்வாளர்கள் நிராகரித்துள்ளனர்.
மேலும் சில மேற்கத்திய நாடுகளில் இலங்கை கடவுச்சீட்டுக்களுக்கு அங்கீகாரம் இருப்பதால் பெற்றோர்களும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தை செய்தவர்களும் அத்தகைய வழிகளை நாடியுள்ளனர்.
இதன் விளைவாக, சிறுவர்கள் முதலில் உண்மையான இலங்கை கடவுச்சீட்டில் மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் அவர்கள் போலி மலேசிய கடவுச்சீட்டு மூலம் உயர் கல்விக்காக ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், கனடா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இதற்காக கடத்தல்காரர்கள் ஒவ்வொரு சிறுவர்களுக்கும் 7 முதல் 9 மில்லியன் வரை வசூலித்து, அவர்கள் வெளிநாட்டில் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதிசெய்துள்ளனர்.
புலம்பெயர் தமிழ் சிறுவர்கள்
மேற்குலகில் உள்ள புலம்பெயர் தமிழ் சிறுவர்களின்; உறவினர்களும் இந்த செயற்பாட்டுக்கு நிதியுதவி அளித்துள்ளனர் என்ற உண்மையை புலனாய்வாளார்கள் நிராகரிக்கவில்லை,
அனைத்து சிறுவர் கடத்தல் சம்பவங்களும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளமையே இதற்கான காரணமாகும்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை மற்றும் அவர்களுடன் கொழும்பில் இருந்து கோலாலம்பூருக்கு சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டு மலேசிய அதிகாரிகளால், கடந்த புதன்கிழமை காலை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
நாடு கடத்தப்பட்ட மூவரும் இலங்கையின் குடிவரவு அதிகாரிகளால் புதன்கிழமை மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் வாக்குமூலங்களை வழங்கியிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |