நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிப்பு(video)
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக மலையகத்தின் பல பிரதேசங்களில் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடுமையான மழை மற்றும் மண்சரிவு காரணமாக ஹட்டன் - கொழும்பு வீதியின் கினிகத்தேனை பிரதேசத்திலும், ஹட்டன் - கண்டி வீதியின் ஸ்டேடன் எஸ்டேட் பிரதேசத்திலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடுவோர் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் மலையக தொடருந்து சேவைகள் ரத்து |
இதேவேளை கொழும்பில் இருந்து மலையகத்துக்கான தொடருந்து சேவைகள் யாவும் மறுஅறிவித்தல் வரை தொடருந்து திணைக்களத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மலையகத்தின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதுடன், மலைச்சரிவுகளில் கடுமையான காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பல மாவட்டங்களில் 100 மி.மீ.க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: கமல்
வட்டவளை
கண்டி - பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வட்டவளை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ஹைட்ரி மக்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர் குடியிருப்பில் அமைந்திருந்த 22 வீடுகளினுள் வெள்ளம் புகுந்துள்ளது.
மகாவலி கங்கைக்கு நீரை விநியோகிக்கும் ஹைட்ரி ஆற்றின் பெருக்கெடுப்பு காரணமாகவே இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட 22 வீடுகளுமே மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த 22 வீடுகளில் குடியிருந்த 25 குடும்பங்களை சேர்ந்த 80 பேர் தற்காலிகமாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
பஸ்பாகே பிரதேசம் செயலகம் மற்றும் நலன்விரும்பிகளால் இவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாக அப்பகுதிக்கான கிராம உத்தயோகத்தர் தெரிவித்துள்ளார்.
வெள்ள நீர் புகுந்த வீடுகளில் அதிகளவான சேற்று மண் நிறைந்து காணப்படுவதுடன் அவற்றை அகற்றுவதற்கு முடியாது தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.
இந்த சேற்று மண் காரணமாக அப்பிரதேசத்தில் துர்மணமும் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடுகளில் காணப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் அனைத்தும் நீரில் அடித்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வீடுகளில் தமக்கு தொடர்ந்து வாழ முடியாது எனவே தமக்கு பொருத்தமான இடத்தில் வீடுகளை அமைந்து தம்மை நிம்மதியாக வாழ வழி செய்து தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறித்த பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தி: க.கிஷாந்தன்
நாவலப்பிட்டி
கினிகத்தேன - நாவலப்பிட்டி பிரதான வீதியில் கெனில்வேத் நான்காம் பிரிவு தோட்ட பகுதியில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
அந்த பிரதேசத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவால் பொது போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் கண்டி மற்றும் நாவலப்பிட்டி செல்லும் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாகவே குறித்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
வீதியில் சரிந்ததுள்ள மண்ணை அகற்றும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி: மலைவாஞ்சன்
கொத்மலை நீர்தேக்கம்
மலையகத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் தொடர் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.
நேற்று முன்தினம் மூன்று வான்கதவுகள் திறந்து விடப்பட்டிருந்தன. மேலும் நேற்று இரண்டு கதவுகள் திறந்து விடப்பட்டிருந்த போதிலும், இன்று மேலும் இரண்டு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
[WGHD9T ]
அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென். கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதேவேளை, டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
செய்தி: க.கிஷாந்தன்