சுகாதாரத் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி நுவரெலியா சென்றுள்ள உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள்
கோவிட் 19 வைரஸ் தற்போது வேகமாக பரவி வரும் ஆபத்து காரணமாக வினோத சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள கோரிக்கையைக் கவனத்தில் கொள்ளாது நுவரெலியாவுக்கு இன்று பெருந்தொகையான உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது.
நுவரெலியா மாநகர சபை, இம்மாத 30 ஆம் திகதி வரை வசந்தகால நிகழ்வுகளை நடத்தி வருவதுடன், இன்று பல போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
நுவரெலியா கிறகரி குளத்திற்கு அருகில் உள்ள இடங்களில் அதிகளவான உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில்,வசந்த காலத்தை முன்னிட்டு நடத்தப்படும் வேடிக்கை வினோத நிகழ்ச்சிகள் தினமும் மாலை 6 மணி முதல் நடத்தப்பட்டு வருகின்றன.
நுவரெலியா நகர எல்லைக்குள் இருக்கும் தங்குமிட விடுதிகளில் அதிகளவான உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது.