வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு அரசாங்கத்தின் விசேட திட்டம்
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்காக குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கையில் அரசாங்கத்தால் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படவுள்ளது.
இந்த விடயத்தை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜயசிங்க அறிவித்துள்ளார்.
விசேட வேலைத்திட்டம்
அவர் தெரிவிக்கையில், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வாகனங்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வித அசௌகரியங்களும் இன்றி சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்குள் சுற்றுலாவில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள் தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு அதன் இணையத்தளத்தின் ஊடாக அறிவிக்க வேண்டும்.
உத்தியோகபூர்வ இணையத்தளத்திலுள்ள படிவம்
அதாவது அதிகாரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து உரிய படிவத்தினை பூரணப்படுத்துவதன் ஊடாக சுற்றுலாப்பயணிகளுக்காக போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களுக்கு உரிய எரிபொருளை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.
விண்ணப்பப்படிவத்தை பார்வையிட, பூரணப்படுத்த இங்கே அழுத்தவும்...
இந்த அனுமதி ஊடாக இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக பெட்ரோலை பெற்றுக் கொள்ள முடியும்.
இதேவேளை குறித்த அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் டீசலை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விமான நிலையத்தில் அமெரிக்க டொலர்களை செலுத்தும் சுற்றுலாப் பயணிகள், வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை பெற்றவர்களுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம் ஒன்றை வழங்க எரிசக்தி அமைச்சர் இணங்கியிருந்ததாக இம்மாத ஆரம்பத்தில் செய்தி வெளியாகியிருந்தது.
விமான நிலையத்தில் டொலர்களை செலுத்துவோருக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம்:எரிசக்தி அமைச்சர் இணக்கம் |
அதன்படி வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு எரிசக்தி அமைச்சர் இணக்கம் தெரிவித்திருந்தார்.