யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த சுற்றுலா மாநாடு
2025இற்கான சுற்றுலா மாநாடு கலப்பு முறையில் (நேரடியாகவும், இணையவழியாகவும்) நடத்தப்பட்டுள்ளது.
குறித்த மாநாடு நேற்று (18.06.2025) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மையத்தில் இடம்பெற்றுள்ளது.
சுற்றுலா மேம்படுத்தல்
இந்திய துணைத் தூதரகத்தால் நடத்தப்பட்ட இந்த மாநாடு, பங்குதாரர்களிடையே கலந்துரையாடல்களை செயல்படுத்துவதன் மூலமும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், சுற்றுலா மேம்பாட்டு முயற்சிகளை ஆதரிப்பதன் மூலமும் இந்தியாவிற்கும் இலங்கையின் வட மாகாணத்திற்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இந்த மாநாட்டை இந்திய துணைத் தூதுவர், யாழ்ப்பாணம் சாய் முரளி மற்றும் வட மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் அ.பத்தினாதன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
துணைத் தூதுவர் சாய் முரளி தனது தொடக்க உரையில், இந்தியாவையும் இலங்கையையும் இயற்கையாகவே இணைக்கும் வரலாற்று, கலாச்சார மற்றும் புவியியல் ரீதியான அண்மைத்தன்மையை வலியுறுத்தினார்.
இலங்கையின் சுற்றுலா மேம்பாடு
இது இருதரப்பு உறவில் சுற்றுலாவை ஒரு முக்கிய அங்கமாக ஆக்குகிறது என்றார். இணைப்பு என்பது சுற்றுலாவின் அடிப்படையாக அமைகிறது என்று குறிப்பிட்ட அவர், சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்ட நாகப்பட்டினம் - காங்கேசன்துறை படகு சேவை, சென்னை - யாழ்ப்பாணம் மற்றும் சென்னை - திருச்சி விமான இணைப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இலங்கையின் சுற்றுலா மேம்பாட்டிற்கு இந்தியாவின் ஆதரவை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டிய துணைத் தூதுவர், அனைத்துப் பங்கேற்பாளர்களும் தீவிரமாகப் பங்கேற்கவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், இலங்கையின் வட மாகாணத்தின் முழு சுற்றுலா திறனையும் வெளிக்கொணர ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராயவும் ஊக்குவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




