காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு பிணை
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்த ஒருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மைலனாரச்சிலாகே டொன் வென்செஸ்லாஸ் ஜெரால்ட் லசரஸ் குணதாச (Mailanarachchilage Don Wenceslaus Gerald Lazarus Gunadasa) என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர் மீது, அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிக்கு ரூ. 6,415,050 பணத்தை இலஞ்சமாக வழங்க உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோத நிதிப்பயன்
இந்த இலஞ்சத்தைப் பெற்றதாகக் கூறப்படும் முன்னாள் சிரேஷ்ட உதவி அரசாங்க பகுப்பாய்வாளர் டி.எச்.எல்.டபிள்யூ. ஜயமான்ன மற்றும் காப்புறுதி நிறுவனத்தின் மற்றுமொரு முன்னாள் உயர் அதிகாரியும் ஏற்கனவே இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இலஞ்சத்தின் மூலம் கன்டினென்டல் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்திற்கு ஒரு சட்டவிரோத நிதிப் பயன் கிடைத்ததாக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.