மாறிவரும் நந்திக்கடலின் மஞ்சள் பாலச் சூழல்: மருது மரங்களுக்கு ஏற்படவுள்ள பேராபத்து(Photos)
மாறுபட்ட காலநிலை கொண்ட வன்னியின் நிலத்தில் வறட்சிக்கு மத்தியிலும் குளிர்ச்சியான இடங்கள் அதிகம் உண்டு.
கடும் வறட்சியால் ஒரு பகுதி பாதிக்கப்பட மற்றொரு பகுதி பச்சைப்பசேலென ஈரநிலங்களால் நிறைந்து காட்சி அளிக்கின்றது.
வன்னி புதிரான பூமி என்பது பலதடவை நிறுவப்பட்டுள்ளதை மீண்டும் மீட்டிப் பார்க்க வேண்டிய ஒன்று.
போர்களாலும் பொருளாதாரத்தாலும் இயற்கை வளங்களாலும் புதிரானது போலவே துரோகங்களாலும் மிகப்பெரும் மாற்றங்களை பார்த்த பூமியாக வன்னி காணப்படுகிறது.
நந்திக்கடலும் நந்தியுடையாரும்
நந்தியுடையார் என்ற பெரு விவசாயி ஒருவரின் வயல் வெளிகளின் அருகே அமைந்துள்ள கடல் நீரேரி என்பதால் நந்திக்கடல் என பெயர் ஏற்பட்டது.
நந்திக்கடல் நீண்ட கடல்நீரேரியாகும். இது வௌவால்வெளி முதல் மாத்தளன் சாலை வரை நீண்டு பரந்துள்ளது.
இரு வழிகளில் இந்துமா சமுத்திரத்துடன் கலக்கின்றது. அதில் ஒன்று தான் முள்ளிவாய்க்கால். இறுதிப்போரின் கடைசி நாட்களை தாங்கிய வட்டுவாகல் எனப்படும் வெட்டுவாய்க்கால் ஆகும்.
மந்துவில், கேப்பாப்புலவு தொடக்கம் வட்டுவாகல் வரை அதிக நீரை கொண்ட நிலமாக நந்திக் கடல் அமைகிறது. இந்த நீண்டவெளிகளில் பல சதுப்புநிலங்களை கொண்டுள்ளன.
மூன்றாம் கட்டை மஞ்சள் பாலம்
மூன்றாம் கட்டை மஞ்சள் பாலத்திற்கு இரு புறங்களிலும் உள்ள சிறு சதுப்பு நிலங்களைச் சார்ந்துள்ள மரங்கள் மற்றும் சம்பு புற்களை தங்கள் வாழிடமாகவும் உணவு தேடும் இடமாகவும் கொக்குகளும் நாரைகளும் பயன்படுத்துகின்றன.
கடந்த காலங்களில் கோடைநேரத்தில் வறண்டு போகும் இந்த நிலம் இப்போது மாற்றமடைந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.
மஞ்சள் பாலத்திற்கு மேலாக முல்லைத்தீவு செல்லும் வீதியின் இருமருங்கிலும் மருது மரங்கள் இயற்கையாக வளர்ந்து வருவதையும் அவதானிக்கலாம்.
ஒருபக்கம் வௌவால்வெளியும் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் பக்கம் நந்திக்கலுமாக உள்ள இந்த நில அமைப்பில் நந்திக்கடல் வெளியில் வீதியோரமாக நாவல் மற்றும் மருது மரங்களும் நட்டு வளர்க்கப்படுதலும் குறிப்பிடத்தக்கது.
பாலத்திற்கு கீழே உள்ள வற்றாதிருக்கும் நீரில் மீன்களும் முதலைகளும் அதிகமாக இருப்பதனை அவதானிக்கலாம். இங்கு மீன் பிடிப்போரும் உண்டு. எனினும் அவர்கள் முதலைகளை தொந்தரவு செய்வதில்லை.
பறவைகளின் கோடைக்கால வாழிடம்
தொடர்ந்துள்ள சதுப்பு வெளியில் உள்ள சிறு சம்புப் புல்லும் ஏனைய புல்லும் எருமைகளுக்கு உணவாகின்றது. கோடை காலங்களில் அதிக பறவைகளை அவதானிக்கலாம். மாரிகலங்களில் அதிக நீர் சேருவதால் பறவைகள் தங்கள் வாழிடத்தை மாற்றுகின்றன.
மற்றொரு பக்கம் நந்திவெளி வயல்வெளிகளும் உள்ளன. வயல்வெளி முழுவதும் பரவியுள்ள மரங்கள் பறவைகளின் வாழிடமாக அமைவதையும் அவதானிக்கலாம்.
முல்லைத்தீவு தொழில்நுட்ப பயிற்சி நிலையத்திற்கு இராணுவ முகாமுக்கும் இடையிலும் அவற்றுக்கு அருகிலும் உள்ள நீரேந்து பகுதிளும் பறவைகள் வந்து தங்கிச் செல்லும் இடங்களாக விளங்குகின்றன.
மஞ்சள் பாலத்திற்கு அருகாக வௌவால்வெளிப் பக்கமாக உள்ள மருது மரங்களில் புலம்பெயர் பறவைகளும் கொக்குகளும் அதிகளவில் தங்கி வாழ்கின்றன.
படத்திலுள்ள கொக்குகள் நந்திக்கடலின் ஒரு காலைப் பொழுதில் படமாக்கப்பட்டது. நீர்வழங்கல் அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கு முன்னாக உள்ள வீதியின் வளைவில் இவற்றை அவதானிகலாம்.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையத்தினரின் ஆதங்கம்
புதிதாக தோன்றி வளரும் மருது மரங்களின் மேலாக பிரதான மின்வடங்கள் செல்கின்றன. இன்னும் சில அடி உயரம் மரங்கள் வளரும் போது மின் கம்பிகளில் தொடுகையை ஏற்படுத்தும்.
இதனால் மின்சார சபையினர் அந்த மருது மரங்களின் மேல்பக்க கிளைகளை வெட்டிவிடும் நிலை ஏற்படும். இயற்கையைமைப்புக்கு அசௌகரியமாக அமையப் போகும் இந்த துர்ப்பாக்கிய நிலையை தவிர்ப்பதற்கு பிரதான மின் வடக்கம்பங்களை மற்றைய பக்கங்களுக்கு மாற்றி விடுதலே பொருத்தப்பாடாக அமையும்.
மாற்றம் நிகழ்ந்து மஞ்சள் பாலத்தின் இரு பக்கங்களிலும் உள்ள இயற்கை உயிர்ப் பல்வகைமையை பேண உரிய தரப்பினர் பொறுப்புணர்வோடு செயற்பட வேண்டும்.
நந்திக்கடல் வனஜீவராசிகளின் வாழிடம் என பிரகடனப்படுத்தி இருக்கும் அரசும் அது சார்ந்த நிறுவனங்களும் இவை பற்றி அக்கறை எடுப்பார்களா என்பது கேள்விக் குறியே!
மாறிவரும் நந்திக்கடலின் சாதகமான இயற்கை அமைப்பை பேணிப்பாதுகப்பதில் மக்கள் தங்கள் உளப்பூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தின் பிரதேச அவதானிபாளர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயம்.