ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கப்பல் மீது ஈரான் அதிரடி தாக்குதல்! முற்றிலும் பொய்யானது என மறுத்த அமெரிக்கா
ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்ற அமெரிக்காவின் ஆளில்லா கடற்படைக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும், இந்தக் கூற்றை அமெரிக்க இராணுவம் “முற்றிலும் பொய்யானது” என மறுத்துள்ளது.
மோதல் தீவிரம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக மூன்று ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போர் ஆரம்பமானது. ஜூன் மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், இரு தரப்புக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் தொடர்ந்தன.

ஒரு மாத கால இடைவெளிக்குப் பின்னர் கடந்த வாரம் மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன. இதனால், உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மோதலின் முக்கிய மையமாகியுள்ளது.
தெற்கு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில் இந்த வார ஆரம்பத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
இதனிடையே, அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணை மீதான தாக்குதல்களுக்கு இராணுவ ரீதியாக பதிலளிப்பதுடன், ஈரானின் நிதிப் பரிவர்த்தனைகளைக் கையாளும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ஈரான், தனது எண்ணெயை சர்வதேச சந்தையில் விற்பனை செய்வதற்காக ‘நிழல் கப்பற்படை’ உள்ளிட்ட வழிகளைப் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், போருக்கு முக்கிய காரணமான ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜூன் மாதத்தில் அமெரிக்கா–ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பின்னர் முறிவடைந்தன.
ஈரான் அணு ஆயுதப் பரவல் தடுப்பு கடமைகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஈரானை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு பரிந்துரைக்க முயற்சித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையின் முக்கியத்துவத்தை பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதை ஈரான் தனது முக்கிய உத்தியாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri